சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கையின் நட்சத்திர வீரர் குமார சங்கக்கார பெற்றுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த உலகின் ஒரே வீரராக இருந்துவந்தவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிறன்று நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் 39 ரன்களை எடுத்த நிலையில் சங்கக்காரவும் அந்த மைல்கல்லை எட்டினார்.
402 ஆட்டங்களில் அவர் 14 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் தனது 24ஆவது ஒரு நாள் சதத்தையும் சங்கக்கார அடித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக 73 பந்துகளில் ஒரு சதம் இங்கிலாந்துக்கு எதிராக 70 பந்துகளில் ஒரு சதம் என இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே இரண்டு சதம் அடித்திருந்த சங்கக்கார இந்த ஆட்டத்தில் அடித்தது இப்போட்டியின் மூன்றாவது சதமென்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்டில் இலங்கை அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடும் டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக சங்கக்கார அறிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக சங்கக்கார ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சென்ற ஆண்டு இருபது ஓவர் போட்டி உலகக் கோப்பையை இலங்கை வென்றதிலிருந்து அவற்றிலிருந்தும் சங்கக்கார ஓய்வுபெற்றிருந்தார்.
Social Buttons