தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே ஜெயக்குமாரியை நீதவான் பிணையில் விடுவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருக்கின்ற இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவது பற்றிய அவரின் கருத்தை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதவான் சட்டமா அதிபருக்கு கடந்த 6ஆம் திகதி பணித்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டார். இதேவேளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி 362 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Social Buttons