Latest News

March 25, 2015

சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழுவின் மோசடி அம்பலம்!
by admin - 0

சுன்னாகம்
murali
பெட்ரோலியத்தில் காணப்படும் பிரதான சேதனப் பொருள் அல்கேன்ஸ் நிரம்பிய ஐதரோகாபன் மூலக்கூறுகள் நச்சுத்தன்மை வாய்ந்ததென அம்பலப்படுத்தியுள்ளார் மருத்துவ சங்கத் தலைவர் முரளி வல்லிபுரநாதன்.

உயர்தர இரசாயனவியல் படித்த மாணவர்களுக்கே இவை நச்சுத் தன்மை வாய்ந்தது எனத் தெரிந்த ஒரு விடயம் ஆகும். ஏற்கெனவே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நூற்றுக்கணக்கான கிணறுகளில் ஆய்வு செய்தும் சுகாதார அமைச்சு 25 கிணறுகளில் எடுத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்கள ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்தும் பெற்றோலியக் கழிவுகள் நீரில் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தரம் வாய்ந்த ஆய்வுகூடங்கள் இருக்கத் தக்கதாக புறொக் (FROG) 4000 எனப்படும் தரம் குறைந்த, அல்கேன்ஸினைக்கூட கண்டு பிடிக்க முடியாத வெளிக்கள உபகரணத்தை கொண்டு பரிசோதனை செய்து "நிபுணர் " குழு ஆபத்தான பதார்த்தங்கள் இல்லை என்று ஊடகங்களில் விளம்பரம் செய்வதன் நோக்கம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் விவசாய சுற்றுச்சூழல் அமைச்சு என்பவை அவ்விடயத்தில் காட்டிவரும் அவசரம் மற்றும் நிழல் நடவடிக்கைகள் பலத்த சந்தேககங்களை எழுப்பியுள்ளதாக மக்கள் அமைப்புக்களும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
FROG 4000 உபகரணத்தினால் கண்டு பிடிக்கப் படக் கூடிய பதார்த்தங்களை இந்த இணைப்பில் காணலாம்

http://www.defiant-tech.com/pdfs/FROG-4000%20Manual%202014%20Vol4.pdf

நச்சு மாசுக்கள்
யாழ் குடாநாட்டின், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுகள் இல்லை என்று அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றது.
சுன்னாகம் பகுதியில் இயங்கி வந்த தனியார் மின் நிறுவனம் ஒன்றின் இயந்திரங்களில் இருந்து பெருமளவிலான கழிவு எண்ணெய் நிலத்தினுள் கசிந்துள்ளதன் காரணமாகவே அந்தப் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் குடிநீர் மாசடைந்துள்ளதாகவும் அந்த நீரைக் குடிப்பது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வடக்கு மாகாணசபையினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழுவே, சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கின்றது.
சுன்னாகம் மின்நிலையத்தை சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் 200 மீட்டர் இடைவெளியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கான சுற்று வலயம் ஒன்றை உருவாக்கி, இந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வு நடவடிக்கையின் முதற்கட்டமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆய்வுகள் நிறைவு பெற்றிருக்கின்றன.
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் உறவுகளின் நிதியுதவியில் நிலத்தடி நீர் ஆய்வுக் கருவியொன்று வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.
நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயில் இருக்கக் கூடிய ஆபத்தான இரசாயனப் பொருட்களை இந்தக் கருவி அளவிடக் கூடியது.
இந்தக் கருவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்களான பென்சீன், தொலுயீன், ஈதையில் பென்சீன், ஓதோ சைலின், பரா சைலின் மற்றும் மெற்றா சைலின் போன்ற பதார்த்தங்கள் 85 வீதமான மாதிரிகளில் முற்றாக இருக்கவில்லை.
15 சதவீதமான மாதிரிகளில் நியம அளவிலும் பார்க்க 200 மடங்கு குறைவான அளவிலேயே இந்த இரசாயனப் பொருட்கள் இருந்ததாக ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்று வட்டத்தினுள் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் கொழும்பில் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டு பார உலோகத்துக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களது ஆய்வு முடிவுகளின்படி ஈயம், கட்மியம், ஆர்சனிக், வனேடியம், நிக்கல் போன்ற ஆபத்தான உலோக நஞ்சுகள் இருப்பது கண்டறியப்படவில்லை என்றும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் வரும் 25 ஆம் திகதி தரையை ஊடுருவிப் பார்க்கும் ராடார் கருவி யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படவுள்ளது என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த டாக்டர் நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் டாக்டர் அ.அற்புதராஜா ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »