![]() |
மோடி |
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ள நிலையில், அவரை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றுகாலை 5.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர் வந்தடைந்தனர்.
அத்துடன் விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன் செங்கம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.
இலங்கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச
விஜயத்தை மேற்கொண்டு
இலங்கை
வந்துள்ளமை வரலாற்று முக்கி
யத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது
பல உடன்படிக்கைகளும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்றைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு பாராளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை இந்திய பிரதமர் மோடி நிகழ்த்தவுள்ளார். மேலும் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் தலைமன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை இலங்கை வர்த்தக சம்மேளனம் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மாநாட்டிலும் இந்திய பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பொருளாதார முதலீட்டுத் துறைகளிலான தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று காலை இடம்பெறவுள்ளன. இந்த இருதரப்பு சந்திப்பின்போது . பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பபடும். . முக்கியமாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துல் வர்த்தக பொருளாதார உறவை மேம்படுத்தல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் குறித்து பேசப்படும்.
மேலும் நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறை அந்த முயற்சிக்கு இந்தியா எவ்வாறான பங்களிப்பை வழங்க முடியும் போன்ற விடயங்களும் பேசப்படவுள்ளன.
அத்துடன் போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் சர்வதேச ரீ்தியில காணப்படுகின்ற சவால்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை என்பன குறித்து கலந்துரையாடப்படும். மீனவர் விவகாரம் சம்பூர் அனல் மின்நிலைய விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது.
இருதரப்பு சந்திப்பின் பின்னர் சில உடன்படிக்கைகளும் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படும். தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியப் பிரதமர் மோடியும் ஊடக அறிக்கைகளை வெளியிடுவார்கள்.
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு முன்னாள் இநதிய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தாலும் அரச விஜயமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த காலங்களில் உறவு விரிசலடைந்துவந்த நிலையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் இரண்டு நாடுகளுக்கு இடையில் உறவு வலுவடைய ஆரம்பித்தது.
அந்தவகையில் இரண்டு மாதங்களில் இரண்டு நாடுகளுக்கு இடையி்ல் நான்கு உத்தியோகபூர்வ விஜயங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு உததியோகபூர்வ விஜயத்த மேற்கொண்டார். அதன் பின்னர் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர். அதனையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வருகை தந்தார். தற்போது இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்துள்ளார்.
அந்தவகையில் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் ஊட்ாக நாட்டின் தமிழ் பேசும் மக்கள் பல எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளனர். அதாவது தமது நீண்டகால பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான அடித்தளம் இந்திய பிரதமரின் வருகையுடன் இடப்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உள்ளது.
இந்திய பிரதமரி்ன் இலங்கை விஜயம் குறித்து சிரேஷ்ட ஊடகவியாளர் அமல் ஜயசிங்க கேசரிக்கு கருத்து வெளியிடுகையில்
நீண்ட காலத்துக்கு பின்னர் இந்திய பிரதமர் அரச விஜயமாக இலங்கை வருகின்றார். இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். காரணம் இலங்கை சீனாவின் பக்கம் சென்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்ற காலத்தில் இந்திய பிரதமர் இலங்கை வருகின்றார். எனவே இது முக்கியமானது. அதாவது இந்து சமுத்திர பிராந்தியத்த்தில் இந்தயாவின் செல்வாக்கு இருப்பதாக வெளிக்காட்டுவதற்கு இந்த பயணம் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தியா இலங்கையின் நெருங்கிய நாடு என்று கூறப்பட்டாலும் அது இதுவரை இந்திய பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்றதில்லை. இம்முறை முதற் தடவையாக இந்திய பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் செல்கின்றார். இது வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என்றார்.
இதேவேளை இலங்கை விஜயம் தொடர்பில் தனது பேஸ்புக் தளத்தில் இந்திய பிரதமர் மோடி கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
"" நான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றேன். எனது விஜயத்தின் மூலம் இலங்கையுடனான பலவமான உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்ககிக்றேன். அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் பின்னர் எனது இலங்கை விஜயம் அமைந்துள்ளது. மீண்டும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பல காலமாக இலங்கையுடனான எமது உறவு நீ்டிக்கின்றது. நாம் வரலாறு சம்பிரதாயங்கள் மற்றும விழுமியங்களை பகிர்கின்றோம். இரண்டு நாடுகளும் கிரிக்கட்டை நேசிக்கின்றன.
இலங்கையின் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றவுள்ளேன். மகாபோதிக்கும் விஜயம் செய்யவுள்ளேன். யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளேன். இந்தியாவின் பிரதமர் ஒருவர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றமை முக்கிய விடயமாகும். யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறும். இந்திய வீட்டுத் திட்டத்தையும் நான் பார்வையிடவுள்ளேன். இலங்கையின் அபிவிருத்தியில் உதவியை செய்வதற்கு இந்தியா அர்ப்பணி்ப்புடன் இருக்கின்றது. இலங்கை மற்றும் இந்திய உறவில் பொன்னான அத்தியாயத்தை நாங்கள் உருவாக்கப்போகின்றோம்"" இவ்வாறு இந்திய பிரதமர் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் பல உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு மோடியின் விஜயத்தின்போது வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க...
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் போது உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான இலங்கைக்கு இந்தியா கடனுதவிகளை வழங்கவுள்ளது என இந்தியாவின் த எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் போது படையினருக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இந்தியா உறுதிமொழிகளை வழங்கவுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே இந்தியா இதனை மேற்கொள்கின்றது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Buttons