![]() |
எவன்கார்ட் |
காலி துறை முகத்தில் இருந்த மஹ நுவர கப்பலில் நடத்தி வரப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையின் ஆயுதங்கள் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றினை தற்போது புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இந்த ஆயுத களஞ்சிய சாலையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் அரச ஆயுதங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தலைநகரில் செயற்பட்ட மற்றொரு தனியார் பாதுகாப்பு நிறுவனமான ரக்ன லங்கா என்ற நிறுவனத்துடன் இந் நிறுவனத்துக்கு இருந்த ஆயுத ரீதியிலான தொடர்புகள் குறித்த தகவல்களும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விரு நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மற்றும் அவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து சட்ட ரீதியில் பிரச்சினை உள்ளதாக குறிப்பிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர அந் நிறுவனக்களின் கீழ் குறிப்பாக எவன்கார்ட் நிறுவனத்தின் கீழ் இருந்த ஆயுதங்கள் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் அது தொடர்பில் விரிவான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எவன்கார்ட் மற்றும் லக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேசரியுடன் இடம்பெற்ற நேரடி விஷேட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே ஏற்கனவே ரக்ன லங்கா மற்றும் எவன்கார்ட் ஆகிய நிறுவனங்களின் 5 அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயண அனுமதி மறுக்கப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நிஸங்க யாப்பா சேனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. சட்ட மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன அவரின் வெளி நாட்டு பிரயாணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே கொழும்பு பிரதான நீதிவான் அவரின் வெளி நாட்டு பயணங்களுக்கு அனுமதி மறுத்தார்.
எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் காலி நீதிவான் நீதிமன்றிலும் ரக்ன லங்கா விவகாரம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றிலும் வெவ்வேறாக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் அவ்விரு நிறுவனங்களும் ஆயுத பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
முன்னதாக காலி நீதிவான் நிலுபுலீ லங்காபுர முன்னிலையில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து மேலதிக விசாரணைகளுக்காக அதனுடன் தொடர்புடைய மூவரின் வெளிநாட்டுப்பயணங்களை தடைசெய்தனர். முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ , 2011 முதல் 2012 செப் டெம்பர் வரை கடற்படை தளபதியாக இருந்ததற்போதைய எவன்கார்ட் நிறுவனத்தின் உதவித்தலைவரும் ஆலோசகர்களின் ஒருவருமான அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, எவன்கார்ட் நிறுவனத்தின் நிருவாகப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் கித்சிறி மஞ்சுளகுமாரயாப்பா, ஆகியோரின் வெளிநாட்டுப்பயணங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.
இதனைவிட ரக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் ரக்னலங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா அதிகாரி எகொடவெல, மற்றொரு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜேகோன் பண்டார ஆகியோரின் வெளி நாட்டு பயணங்களைகொழும்பு நீதிமன்றம் தடை செய்தது.
இந் நிலையிலேயே இவ்விரு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவினர் அறுவரின் வெளி நாட்டு பயணங்களை நீதிமன்ற உதவியுடன் தடை செய்துள்ளனர்.
Social Buttons