இலங்கை செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ரகசியமாக நேரில் சந்தித்து பேசக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிறார். இலங்கையில் அவர் 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்த போரின்போது வாழ்வாதாரத்தை இழந்த ஈழத்தமிழர்களுக்கு இந்தியா கட்டி கொடுத்துள்ள வீடுகளை பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளார். இது தவிர பல ஒப்பந்தங்களிலும் மோடி கையெழுத்திட உள்ளார். இந்த பயணத்தின் போது இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சி தலைவர் நிமல் ஸ்ரீபால் டீ சில்வா ஆகியோரை மோடி சந்திக்க உள்ளார்.
மேலும் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசவும் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும் பிரதமர் மோடியை சந்தித்து பேச தீவிரமாக முயன்று வருவதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் படு தோல்வி அடைந்த ராஜபக்சே மீது ஏராளமான ஊழல் புகார்கள் வெளியாகியபடி உள்ளது.
ராஜபக்சே தன் பதவியை தவறாக பயன்படுத்தி பல ஆயிரம் கோடி சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்ற கேள்வி குறியும் எழுந்துள்ளது.
இதுபற்றி இந்திய-இலங்கை அதிகாரிகளிடம் கேட்டபோது மோடி-ராஜபக்சே சந்திக்கும் திட்டம் பற்றிய தகவலை உறுதிபடுத்த மறுத்து விட்டனர்.
Social Buttons