நாடுகடத்தப்படும் அபாயத்திற்கு முகம்கொடுத்திருந்த ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த முக்கிய சாட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கண்ணன் காளிமுத்து இறுதி நேரத்தில் அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய குடிவரவுத் திணைக்களத்தினால் நாளை காலை சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்படவிருந்த கண்ணனின் நாடு கடத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த இறுதிநேர மனுவை விசாரித்த நீதிபதி அவரது நாடு கடத்தலை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிய முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சொந்த இடமாகக் கொண்ட 37 வயதுடைய கண்ணன் காளிமுத்து என்பவரே நாடு கடத்தலுக்கான ஆபத்தை எதிர்நோக்கியிருந்தார்.
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள பிரதான விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த கோன்புறுாக் அகதிகள் தடுப்பு முகாமில் கடந்த ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கண்ணனை நாளைய தினம் வெள்ளிக்கிழமை நாடு கடத்தப் போவதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் அறிவித்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் மாத்திரமன்றி ஸ்ரீலங்கா அரச படைகளின் மோசமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிய ஒருவரை நாடு கடத்த பிரித்தானிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவும் கடும் அதிர்ச்சி வெளியிட்டிருந்தன.
உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட கோன்புறூக் அகதிகள் தடுப்பு முகாமில் கண்ணனைத் தடுத்துவைத்திருப்பதால் அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கையை முறையாக முன்னெடுக்க முடியாதிருப்பதாகவும், இவருக்குத் தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையின் நியாயப்பாட்டை தெளிவுபடுத்த முடியாதிருப்பதாகவும் அவரது சட்டத்தரணிகளும் தெரிவித்திருந்தனர்.
பிரித்தானியாவில் கண்ணனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவ நிபுணர்கள் கண்ணன் துன்புறுத்தல்கள் காரணமாக உடல், உள ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் அகதிகள் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பு முகாம்களில் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற பிரித்தானிய நிறுவனமொன்றுக்கு அளித்த சாட்சியமொன்றில் ஸ்ரீலங்கா அரச படைகளின் தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் கொடூரங்கள் தொடர்பில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட 37 வயதுடைய கண்ணன் காளிமுத்து விரிவான சாட்சியங்களை வழங்கியுள்ளார்.
மருத்துவ ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான ஒருவரை தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைத்து, துரித அகதிகள் கோரிக்கை விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துவது பிரித்தானிய குடிவரவுத்துறை திணைக்களத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் அவர் சார்பில் ஆஜரான மேன்பீல்ட் சட்டத்தரணிகள் அலுவலகத்தின் பெரிஸ்டர் சிவானி ஜெகராஜா தெரிவித்திருந்ததுடன், இந்தக் காரணங்களை முன்வைத்து அவரது நாடு கடத்தலுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு கோரி அவசர மனுவொன்றையும் தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்ணனை நாடுநடத்துவதை உடனடியாக தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்னும் சில மணித்தியாலங்களில் நாடு கடத்தப்படவிருந்த கண்ணன் காளிமுத்து நாடு கடத்தலில் இருந்து தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது மனநிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது மனநிலை தொடர்பில் ஆராய்ந்த மனநல மருத்துவ நிபுணர் சாலி டுமா குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு தொடர்பில் நீதியான விசாரணைகளை வலியுறுத்திவரும் நிலையில் அதற்கு சிறந்த சாட்சியாக இருக்கக் கூடிய கண்ணன் போன்றோரை ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் நீதியான சர்வதேச விசாரணையை மறுதலிப்பதற்கு சமனானது என்றும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பீ.நடேசன் தலைமையிலான காவல்துறையில் முக்கிய பதவியொன்றை வகித்த கண்ணன் காளிமுத்து இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த முக்கிய சாட்சியாளராகவும் இருந்து வருகின்றவராவார்.
குறிப்பாக இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நடேசன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் படுகொலை சம்பவம் குறித்த முக்கிய சாட்சியாளராகவும் இவர் இருப்பதாக இவரது நாடு கடத்தல் குறித்த தகவலை முதலில் வெளிப்படுத்திய ஜே.டி.எஸ் என்ற சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment