அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் "ஒன்இந்தியா"விடம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நால்வரும் உச்சநீதிமன்றத்தை அணுகி ஜாமீின் பெற்று வெளியே வந்தனர்.
அதன் பின்னர் நால்வர் சார்பிலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தனி நீதிபதி குமாரசாமி பெஞ்ச் தினசரி விசாரணையாக நடத்தி முடித்தது. தற்போது நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு அனைவராலும் எதிர்பார்க்ககப்படுகிறது. காரணம், வழக்கு விசாரணையின்போது இரு தரப்பு வாதங்கள் அதுபோல இருந்தன. அதை விட முக்கியமாக நீதிபதி குமாரசாமி கேட்ட பல கேள்விகள் தீ்ர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தீர்ப்பு தேதி குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் ஒன்இந்தியா செய்தியாளர் கேட்டபோது, இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரலாம். இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வழக்கானது, தனி நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா மற்றம் பிறர் தாக்கல் செய்த அப்பீலாகும். அரசுத் தரப்பில், தனி நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். கூடுதல் தண்டனை குறித்து நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. கூடுதல் தண்டனை கோருவதாக இருந்தால் அரசுத் தரப்பில் அதற்கு தனியாக மனு செய்ய வேண்டும். எப்படியும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும். ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசுத் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகும் என்றார் அவர்..
பாதுகாப்பு ஏற்பாடுகள்: இதற்கிடையே, தீர்ப்பையொட்டி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறையினரும் ஆயத்தமாகி வருகின்றனர்.
தீர்ப்புக்கு ஒரு நாள் முன்னதாக பெங்களூர் காவல்துறை உஷார்படுத்தப்படும். உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்படுவர். தீர்ப்பு நாளன்று கர்நாடகத்திலும், பெங்களூரிலும் எந்த வன்முறையும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தையொட்டியுள்ள கர்நாடக எல்லையிலும் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனராம்.
Social Buttons