யாழ்ப்பாண மாணவர்கள் மருத்துவமனையில்
யாழ்ப்பாணம், ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர் விஷமான காரணத்தினாலேயே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையின் நீர் தாங்கியிலிருந்து நீரைக் குடித்தமையால் மாணவர் சிலர் மயக்கமடைந்ததாகவும் , இதனைத் தொடர்ந்தே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஏழாலை, மயிலங்காடு ஸ்ரீ முருகன் வித்தியாசாலைக் குடிதண்ணீர் தாங்கிக்குள் விசமிகளால் காட்டுமிராண்டித்தனமாக நச்சுப் போத்தல் போடப்பட்டுள்ளமை மிகவும் கேவலமான ஒரு செயற்பாடு. இவர்கள் யாராக இருந்தாலும் உடன் கண்டறியப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.
வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ், மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில்,
எமது வலி.தெற்குப் பிரதேசத்தில் குடிதண்ணீரில் ஒயில் கலந்துள்ளமை கண்டறியப்பட்டு, வலி.வடக்கு, வலி.தென்மேற்கு, வலி.மேற்கு, நல்லூர் பிரதேசசபையின் சில பகுதிகள் என்று பரவலாகக் குடிதண்ணீர் மாசடைந்துவருகின்றமை எமது குடாநாட்டில் பாரிய அனர்த்த செயற்பாடாகக் காணப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
எமது பிரதேசத்திலேயே முதன்முதலில் தண்ணீரில் ஒயில் காணப்பட்டமையால் நாம் உடனடி நடவடிக்கையாக மக்களுக்கு சீரிய, சிறப்பான சேவையை ஆற்றுவதற்கு முன்வந்து அவர்களுக்கு எமது சபைநிதியில் நீர்த்தாங்கி வைத்து, குடிதண்ணீர் விநியோகத்தை ஆரம்பித்து அவர்களின் பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வு குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம்.
இந்நிலையில், இன்று எமது பிரதேசத்துக்குட்பட்ட ஏழாலை, மயிலங்காடு ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் வைக்கப்பட்டுள்ள குடிதண்ணீர் தாங்கியினுள் நச்சுப் போத்தலை மூடியைத் திறந்த நிலையில் போட்டு தண்ணீரில் நச்சுக் கலவையை சில விசமிகள் உருவாக்கியுள்ளார்கள்.
இதனால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் அந்த நச்சுநீரை அருந்திய 26 மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் தமது உயிருக்காகப் போராடும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.
எமது பிரதேசத்தில் பிரதேச செயலகமும் நாமும் (பிரதேச சபையும்) தண்ணீர்த் தாங்கிகளை வைத்துள்ளோம். நீர்ப்பாசனத் திணைக்களமும் நாமும் (பிரதேசசபை) மக்களுக்கு நீர்விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
எம்மால் (பிரதேசசபையால்) 99 தண்ணீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டு, எமது சபையால் அவற்றுக்கு நீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சம்பவத்தைப் பார்க்கின்றபோது எம்மால் நீர்விநியோகம் செய்யப்படுகின்ற அத்தனை தாங்கிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியே? எமக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் – எமது சபை நடவடிக்கைகளை முடக்குவதற்காகவும் சில விசமிகள் திட்டமிட்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம்.
இது எமது இனத்தைத் திட்டமிட்டு அழிக்கும் விசமத்தனமானதும் காட்டுமிராண்டித் தனமானதுமான ஒரு ஈனச்செயற்பாடாகும். இந்தச் செயற்பாட்டை மேற்கொண்டவர்கள் யாராகவிருந்தாலும், அரசியல் பின்புலத்தில் இந்தச் செயற்பாடு நடைபெற்றிருந்தாலும் அவர்கள் பாரபட்சம் பாராது, சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உடன் தண்டிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Post a Comment