இலங்கையில் ஆட்களை கைதுசெய்யும் போது காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை பார்க்கச் சென்றிருந்த போதே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்த நபர்கள் முறையற்ற விதத்தில் கைதுசெய்யப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
'இது நல்லாட்சி அல்ல' என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று பொலிசாரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி உள்நாட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பது பற்றி மகிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
உறுதி மொழிகளை வழங்கினால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் 'இது அவர்களின் அரசாங்கம், அவர்களால் எதுவும் செய்ய முடியும்' என்றும் கூறினார் மகிந்த ராஜபக்ஷ.
இவ்வாறு உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் காட்டிக்கொடுக்கப்படுவார்கள் என்று எதிர்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
'அரசாங்கம் அவர்களை காட்டிக் கொடுக்கக் கூடும். ஆனால் மக்கள் இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்' என்று மகிந்த ராஜபக்ஷ பதில் கூறியுள்ளார்.
Social Buttons