Latest News

March 25, 2015

இறுதிப் போட்டியில் யார்- மீண்டும் ஆசிய அணி தகுதிபெறுமா ?
by Unknown - 0

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணிதான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகிறது. அந்தப் பெருமையை இந்தியா கட்டிக் காக்குமா, நாளைய அரை இறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகிறது.

1992 ஆம் ஆண்டு உலக கோப்பையை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996-ம் ஆண்டு உலக கோப்பையை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் வென்றன. இதன் பிறகு 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2003 ஆம் ஆண்டு ஆசிய ஜாம்பவான் இந்தியா, 2007 ஆம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அங்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தன. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் இறுதிச்சுற்றில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும். அப்போட்டியில் இந்தியா மகுடம் சூடியது. 

நடப்பு உலக கோப்பை திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் கால்இறுதியுடன் கிளம்பி விட்டன. இந்தியா மட்டுமே எஞ்சி இருக்கிறது. சிட்னியில் நாளை நடக்கும் அரைஇறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் யுத்தம் நடத்துகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு எகிறியுள்ளது.

அதே சமயம் யார் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை சந்திக்கப் போகிறார்கள் என்பதும் நாளை தெரிந்துவிடும். இதற்காக இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணியை பார்த்து, அரையிறுதி வரை வரும் என்றே யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் எடுத்த இந்தியா தோல்வியைத் பெறாமல் அரையிறுதியில் கால் வைத்துள்ளது.

இந்திய அணியை பொறுத்த வரை தவான், ரஹானே, கோஹ்லி, ரெய்னா, டோனி, ரோஹித் என வலுவான துடுப்பாட்ட வரிசை உள்ளது. இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போட்டிகளில் எல்லாம் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளது.

இந்திய அணிக்கு துடுப்பாட்டத்தைப் போலவே பந்துவீச்சும் நல்ல நிலையில் காணப்படுகிறது. 7 ஆட்டத்திலும் இந்திய பவுலர்கள் எதிர் அணிகளை ‘ஆல்அவுட்' செய்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும் ஷமி, மொகித், உமேஷ் என வேகத்தில் மிரட்டும் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சவாலாக இருப்பர்.

அதே சமயம் சுழலுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து அவுஸ்திரேலிய வீரர்களுக்கு தலைவலியாய் இருக்கும்.

சிட்னியில் 70 சதவீதம் இந்திய ரசிகர்களே நிரம்பி வழியும் என்பதால் அவர்களின் அமோக ஆதரவால் இந்த முறையும் அவுஸ்திரேலியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவும் வலுவான நிலையிலே உள்ளது. துடுப்பாட்டத்தில் நடுவரிசையில் மேக்ஸ்வெல் ஆபத்தானவராக இருக்கிறார். இவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை அடித்து துவைக்கலாம்.

மேலும் வார்னர், ஸ்டீவன் சுமித், ஆரோன் பிஞ்ச், வாட்சன், கிளார்க் போன்ற துடுப்பாட்டக்காரர்களும் எந்த நேரத்திலும் இந்திய அணிக்கு அழிவை தேடி தரும் வாய்ப்பு இருக்கிறது.

பந்துவீச்சில் மிட்சேல் ஸ்டார்க் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மிட்செல் ஜான்சன் வேகத்தால் இல்லாவிட்டாலும் இந்திய வீரர்களை சீண்டு விட்டு கவிழ்த்து விடுவதில் குறியாய் இருக்கிறார். ஹசில்வுட், கம்மின்ஸ், பால்க்னெர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

சிட்னியில் கடந்த 35 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்துள்ளது. ஆனால் டோனி தலைமையில் இந்தியா வலுவான நிலையில் இருப்பதால், பழைய வரலாறுகளை கண்டுகொள்ளாமல் புதிய வரலாறு படைப்பதில் இந்திய வீரர்கள் குறியாய் இருக்கின்றனர்.

இறுதிப்போட்டியில் நுழைய இந்தியா- அவுஸ்திரேலியா இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »