Latest News

March 27, 2015

வடக்கு மக்களின் தேவைகளை கேட்கும் டக்ளஸ்
by admin - 0

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை இன்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் EPDP செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தார்.


இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் நிலவும் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இல:- 273, ஸ்ரான்லிவீதி,
யாழ்ப்பாணம்
27.03.2015.

கௌரவ ரணில் விக்கிரமசிங்க பா.உ
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.

கௌரவ பிரதமர் அவர்கட்கு,

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளும்.

 • நிலத்தடிநீர் மோசமாகப் பாதிப்படைந்துவரும் யாழ் மாவட்டம் உட்பட குடி நீருக்குப் பாரிய நெருக்கடியைச் சந்தித்துவரும் வடமாகாணத்தின் மக்கள் அனைவருக்கும் பொருத்தமான பொறிமுறை ஊடாக சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும். சுன்னாகம் நிலத்தடிநீரில் கழிவொயில் கலந்தமை சம்பந்தமாக அன்றுஎனது அமைச்சரவை பத்திரத்துக்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. (பாதுகாப்புஅமைச்சின் தற்போதையசெயலாளராக இருக்கும் திரு. பஸ்நாயக்கா அவர்கள் இக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்). இதேபோல் வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவும் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்திருக்கிறது. இரண்டு அறிக்கைகளும் வெளிப்படுத்தப்பட்டு சரியானமுறையில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுதல் வேண்டும். இவ்விடயம் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் வாய் மூல வினா  எழுப்பி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 • இரணைமடு நீர்விநியோகத் திட்டத்துடன் இணைந்தயாழ்   மாநகரசபைக்கு உட்பட்ட கழிவுநீர்வாய்க்கால் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை விரைவாக செயற்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
 • எமது கடல் வளத்தை அழித்தும், சுரண்டியும் எமது கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற, தடைசெய்யப்பட்டதும் எல்லை தாண்டியதுமான மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதோடு, எமது கடற்;தொழிலைப் புனரமைப்புச் செய்து, நவீனமயப்படுத்தி எமதுகடற்தொழிலாளர்களது வாழ்வை மேம்படுத்தல் வேண்டும். அத்துடன் வடமாகாணத்தில் மீனவர் நலன்சார்ந்த சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வழிவகைசெய்தல் வேண்டும். இவ் விடயம் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் வினா எழுப்ப உள்ளேன்.
 • வடமாகாணத்தில் இரகசியதடுப்பு முகாம்கள் காணப்பட்டால் அவை வெளிப்படுத்தப்பட்டு அதிலே தடுத்து வைக்கப்பட்டவர்கள் விபரங்கள் தெரியப்படுத்தப்படவேண்டும். இவ் விடயம் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் வாய் மூல வினா எழுப்பியுள்ளதையும் நினைவுபடுத்துகின்றேன்.
 • நீண்டகாலமாகவும் விசாரணைகள் இன்றியும்,குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும்,புனர்வாழ்வு வழங்கப்பட்டும் சிறைகளில் வாடும் அனைத்துதமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்தல் வேண்டும்.
 • வடக்குநோக்கிப் பயணம் செய்யும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஓமந்தைச் சோதனைச் சாவடியை முற்றாக அகற்றல் வேண்டும்.
 • மக்களின் நிலம் மக்களுக்கேசொந்தம் என்பதேஎமதுநிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலமும் உரியவர்களிடம் மீளஒப்படைத்தல் வேண்டும்.
 • யுத்தத்திற்குப் பின்னர் சொந்தவாழ்விடம் திரும்பிய மக்களினதும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களினதும் வாழ்வாதாரத்தைமேலும் மேம்படுத்த உரியதிட்டங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
 • 25/2014. 25/2014 (01) ஆகிய சுற்றறிக்கைகளின்படி தற்காலிக, அமைய (நாளாந்த), பதில் கடமை ஒப்பந்த மற்றும் சலுகைஅடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வடமாகாணசபையின் கீழுள்ள திணைக்களங்களில் பணியாற்றுகின்ற அலுவலர்களுக்கும், தேசியபாடசாலைகளில் பணியாற்றும் கனிஷ்டதர ஊழியர்களுக்கும், இலங்கை போக்குவரத்துசபையில் வடமாகாணசாலைகளில் கடமையாற்றுகின்ற ஊழியர்களுக்கும், யாழ் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கடைமையாற்றுகின்ற ஊழியர்களுக்கும், யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஒருதொகுதி சுகாதாரத் தொண்டர்களுக்கும் 2015 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை காலக்கிரமத்தில் வழங்குதல் வேண்டும்.
 • முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
 • யாழ்.மாவட்டத்தில் காணப்படுகின்ற நலன்புரி நிலையங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்திசெய்யப்படுதல் வேண்டும்.
 • யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்றன. இவற்றினை நாளாந்தம் அகற்றுவதற்குரிய பொறிமுறை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
 • யாழ் மாநகரசபை கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை உடனடியாக விடுவித்து கட்டிடத்தின் பூர்வாங்க வேலைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
 • தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் செல்வதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் ஆரம்பித்து, அதற்கு மேலதிகமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விசேடஅதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
 • யுத்தசூழலால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்து போன மக்களை தூக்கிநிமிர்த்த உதவியிருக்கும் சமுர்த்திக் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதுடன் சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தல் வேண்டும்.
 • யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கில் வேலையற்று இருக்கும் எமது இளைஞர், யுவதிகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தல். சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தொழில் வாய்ப்புக்களை மேலும் ஏற்படுத்துதல். சொந்தப் பொருளாதார வளர்ச்சியில் எமதுமக்கள் வாழுவதற்கான சூழலைஏற்படுத்தல் வேண்டும்.
 • விவசாய, உள்ளூர் உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றை ஊக்குவித்து, ஒவ்வொருவரும் சுய பொருளாதார வளர்ச்சியடைய நிதிவளம், உள்ளீடுகள் மற்றும் மூலப்பொருட்களை வழங்குதல் வேண்டும்.
 • பலாலி விமானநிலையத்தை சர்வதேசதரத்திற்கு உயர்த்தி கட்டியெழுப்பப்படவேண்டும்.
 • இழந்தவர்களுக்கும் பரம்பரைத் தொழில்களை இழந்தவர்களுக்கும் நஸ்டஈடுகளும் நிவாரணங்களும் வழங்கப்படவேண்டும்.
 • யாழ் ஏழாலை சிறிமுருகன் வித்தியாலயத்தில் குடிநீர் தாங்கியில் நச்சுதிராவகம் கலந்தமைதொடர்பில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
 • வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் கீழே இயங்குகின்ற வன்னிப்பகுதி பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
 • யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையினுடைய செயற்பாடு இல்லாத காரணத்தினால் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.பேரவையினை இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
 • அரசகாணிகளில் குடியிருக்கும் மக்களில் சிலருக்குரிய காணிஉறுதிகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏனைய பிரதேச செயலகங்ளுக்குட்பட்ட பிரிவுகளிலும் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணிஉறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/433 கட்டைக்காடு கிழக்குப்பகுதியை சேர்ந்த அரசகாணியில் குடியிருப்பவர்களுடைய காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
 • அண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்திய அரசினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கு ஆவனசெய்யப்படுதல் வேண்டும். அதேவேளை அந்தப் பிரதேசத்திற்குரிய போக்குவரத்து, மின்னிணைப்பு, சுகாதாரம், குடிநீர்வசதிகளை உடனடியாக மேற்கொள்ளல் வேண்டும். விசேடமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அனைவருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் இலவசமாக மின்னிணைப்புகள் வழங்கப்படுதல் வேண்டும்.
 • யாழ் மாவட்டத்தில் காணப்படுகின்ற வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதிகளையும், வீதிஅபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளையும் திருத்துவதற்கு உடனடியாக பணிப்புரை வழங்கவேண்டும்.
 • வடமாகாணசபையின் கீழுள்ள திணைக்களங்களில் காணப்படுகின்ற சுமார் 400 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படுதல் வேண்டும்.
 • வடமாகாணசபையின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்களில் காணப்படுகின்றசுமார் 100 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள் நிரப்பப்படுதல் வேண்டும்.
 • வடமாகாணசபையின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்களில் களப் பணிபுரிகின்ற அலுவலர்கள் மோட்டார் சைக்கிள்களை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களுக்குரிய மோட்டார் சைக்கிள்கள் காலக்கிரமத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.
 • வடமாகாணத்தில் வெற்றிடமாக உள்ள தேசியபாடசாலை அதிபர் வெற்றிடங்கள் யாவும் வெளிப்படையாக விளம்பரம் கோரப்பட்டு நிரப்பப்படுதல் வேண்டும்.

நன்றி.

மக்கள் சேவையிலுள்ள

டக்ளஸ் தேவானந்தா பா.உ
நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ் – கிளிநொச்சிதேர்தல் மாவட்டம்

« PREV
NEXT »

No comments