Latest News

March 05, 2015

முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின்?
by admin - 0

 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் தலைமை செயற்குழு நாளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தி.மு.க.வின் தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இக் கூட்டத்துக்கு வழக்கம் போல தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். 

இதில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். 

2016 சட்டசபை தேர்தலுக்கு கட்சி எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து பல்வேறு முக்கிய வியூகங்கள் இக்கூட்டத்தில் வகுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அண்மையில் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பேசிய கருணாநிதி, தமிழகத்தின் முதல்வரா 6வது முறையாக மீண்டும் அமர வேண்டும் என்ற ஆசை இல்லை என்று கூறியிருந்தார். 

இது தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. இதனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி இனி தேர்தலில் போட்டியிட மாட்டார்; மு.க. ஸ்டாலினே தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் கூறப்பட்டது. இருப்பினும் தி.மு.க. நிர்வாகிகள் பலரும் இதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் நாளை கூடுகிற தி.மு.க. தலைமைச் செயற்குழுவில் மு.க.ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே நாளைய தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை தீர்மானக்குழு தயாரித்துள்ளது. 

இதை நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி படித்துப்பார்த்தார். அப்போது ஒருசில திருத்தங்களை செய்தார். மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. தி.மு.க.வின் செயல்பாடுகள் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கூட்டணி குறித்தும், பொதுமக்களை எவ்வாறு சந்தித்து ஆதரவு திரட்டுவது என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

 இந்த தலைமைச் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு தி.மு.க.வினர் சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 


« PREV
NEXT »

No comments