Latest News

March 04, 2015

லண்டனில் நடைபெற இருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் தவிக்க முடியாத காரணத்தால் திகதிமாற்றப்படுள்ளது
by admin - 0


மகாராணியாரை தமிழினப்படுகொலையாளன் மைத்திரி சந்திப்பதா ?
பிரித்தானியாவுக்கு வரவுள்ள சிறீலங்கா அரசஅதிபர் மைத்திரி பால சிறீசேனவுக்கு எதிராக மாபெரும் கொட்டொலிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடத்தாமல் மார்ச் 9ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு SW1Y 5HX, Pall Mall இல் அமைந்துள்ள பொதுநலவாய நாடுகளின் தலைமைச் செயலகமான Marlborugh Houseக்கு முன்பாக நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த 53 நாட்டுத்தலைவர்களும் ஒன்றுகூடும் போது, அவ்வமைப்பின் தலைவரான சிறீலங்கா அரச அதிபர், தமிழினக்கருவறுப்பை மூர்க்கமாக முடுக்கி விட்டிருக்கும் சிங்களப் பேரினவாதி என்பதை உலகுக்கு எடுத்துரைக்க, அனைத்துத் தமிழர்களும் அணிதிரள வேண்டும். ஆட்சிமாற்றம் என்ற போர்வைக்குள் அரச பயங்கரவாதத்தையே மைத்திரியும் கட்டவிழ்த்துள்ளார் என்பதைத் தமிழர்களாகிய நாம் அனைத்துலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். வல்லாதிக்க அரசியல் சதுரங்கத்திற்குப் பலியாகாமல் தாயகமாம் தமிழீழத்தை மீட்டெடுக்கும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்பதைப் பறை சற்றும் வகையில் இப்போராட்டம் அமைய வேண்டும்.

முள்ளி வாய்க்காலில் தமிழினம் கொன்றழிக்கப்பட்டபோது கொதித்தெழுந்த தமிழர்கள் உலகின் கதவுகளை உலுக்கித் தட்டினர். இரத்த உறவுகள் கொத்துக் கொத்தாக சாகடிக்கப்பட்டபோது துடித்த தமிழர்கள் மனித உரிமை அமைப்புகளிடம் மன்றாடினர். உலகத் தெருக்களில் ஒன்று திரண்டனர். ஆனாலும் ஆதிக்கப் பயங்கரவாதம் தமிழீழ மண்ணைக் குருதியில் குளிக்க வைத்தது. போரை முடித்து விட்டோம் எனச் சிங்களப் பேரினவாதம் எக்காளமிட்டது. இந்தக்கணம் வரை வலிகளோடும் ஆறாத வடுக்களோடும் குருதி சொரியும் விழிகளோடும் தமிழீழ மக்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
சிங்களப்பேரினவாத அரசின் தலைவரான மைத்திரி, தமிழினக் கருவறுப்பைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டு, எந்த உலக நாடுகளிடம் தமிழர்கள் நீதி கேட்டு எழுந்து நிற்கின்றனரோ, அந்த நாடுகளுக்கெல்லாம் சென்று அரச ஆதரவு திரட்டுகிறார். அந்தவகையில் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் என்ற பதவி மகுடம் அணிந்திருக்கும் மைத்திரி ராஜ விருந்துக்கு பிரித்தானியா வருகிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழீழத்தமிழர்கள் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தியது மகிந்த என்னும் தமிழினப் படுகொலையாளனைப் பதவியிலிருந்து அகற்றவே ஒழிய மாறுவேடம் பூண்டு ஆட்சிப் பொறுப்பேற்று, தொடந்தும் தமிழினத்தைத் திட்டமிட்டவகையில் அழிக்கும் மைத்திரியை ஆதரித்து அல்ல என்பதை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
எனவே நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்துப் போராடும் தமிழர்களாகிய நாம் எமது உரிமைக்குரலைப் பிரித்தானிய மண்ணில் ஓங்கி ஒலிப்போம். அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் .

பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு 

தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் 

தொடர்புகளுக்கு 020 3371 9313


« PREV
NEXT »