நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்பட வுள்ளன. இது எதிர்வரும மூன்றுமாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் அமைப்பான யிவிஹிதி வின் (இக்டா) நேற்று நடைபெற்றபோதே பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா இதனைக் கூறினார்.
இதேவேளை, அனைவருக்கும் பயனுடையதாகும் வகையில் அரச பல்கலைக்கழகங்கள், தொழில் கல்வி நிறுவனங்கள், உயர்நிலை புகையிரத ஸ்தானங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், சகல போதனா, மாவட்ட மற்றும் ‘ஏ’ தர வைத்தியசாலைகள், மக்கள் பூங்கா, பொது நூலகங்கள், மக்கள் வெகுவாக வருகைதரும் அரச அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுக்கு இந்த இலவச ‘வை-பை’ வசதிகளை வழங்க தீர்மானித்திருப்பதாக ‘இக்டா’ வின் பிரதம நிறைவேற்றதிகாரியான முகுந்தன் கனகே தெரிவித்தார்.
இலவச இணைப்பின் கீழ் ஒருவர் மாதாந்தம் 100 மெகா பைட்ஸினை செக்கனுக்கு 512 கிலோ பைட்ஸ் வேகத்தில் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார். மேலும் ‘இக்டா’ தலைவரான திருமதி சித்ராங்கனி முபாரக், குறுகிய காலத்திற்குள் இத்தனை பெரிய திட்டத்தை சாதிக்க முடியுமென நாம் இன்றுமே நினைத்திருக்கவில்லை. இதற்காக ஒத்துழைப்பு வழங்கும் எமது பங்காளிகளுக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் தேர்தல் வாக்குறுதியை பூர்த்தி செய்வதற்காக மாத்திரம் இலவச ‘வை-பை’ இணைப்பை வழங்கவில்லை. தற்போதைய உலகில் இணைய வசதிகள் ஒரு சொகுசு சாதனமல்ல. நீர், மின்சாரம், எரிவாயு போன்று அதுவும் ஒரு அடிப்படை வசதியாகும். எனவே தான் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறியதற்கு மேலதிகமாக அதி வேகத்துடனான ‘வை-பை’ வசதிகளை மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளோம்.
எமது நாடு டிஜிட்டல் யுகத்தில் பங்கெடுப்பதனை பெருமிதமாகக் கொண்டு சகல தொலைபேசி கம்பனிகளும் இந்த இலட்சிய பயணத்தின் பங்காளிகளாக வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
No comments
Post a Comment