ஒரு மரங்கொத்தியின் முதுகில் மரநாய் ஒன்று பயணம் செய்யும் காட்சியை அமெச்சூர் புகைப்படக் கலைஞர் ஒருவர் படமெடுத்துள்ளார்.
இணையத்தில் இந்தக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியைச் சேர்ந்த அமெச்சூர் புகைப்படக் கலைஞரான மார்டின் லீமே என்பவர் பதிவுசெய்திருக்கும் இந்தப் புகைப்படங்களில், மரங்கொத்தியைத் தாக்கும் மரநாயும் அதிலிருந்து விடுபட மரங்கொத்தி முயற்சிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
எஸ்ஸெக்ஸில் இருக்கும் ஹார்ன்சர்ச் கன்ட்ரி பூங்காவில் திங்கட்கிழமையன்று மதியம் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
தன்னுடைய மனைவி ஆனுடன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது இந்தக் காட்சியை தான் படமெடுத்ததாக லீ - மே பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஏதோ வேதனையுடன் கத்தும் சத்தம் கேட்டது. மிக மோசமாக ஏதோ நடக்கிறது என்று நினைத்தேன். பிறகுதான் ஒரு மரங்கொத்தி, தன் முதுகில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய மிருகத்துடன் போராடிக் கொண்டிருக்கும் காட்சி கண்ணில்பட்டது.
மரங்கொத்தி தரையில் இறங்கியதும் மரநாயின் கவனத்தை நாங்கள் திசைதிருப்பிவிட்டோம் என நினைக்கிறேன். அது மரங்கொத்தியிலிருந்து இறங்கி புதருக்குள் ஓடிவிட்டது" என லீ-மே பிபிசியிடம் தெரிவித்தார்.
"எல்லோரும் நான் எடுத்த புகைப்படத்தைப் பார்க்கிறார்கள் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்கிறது" என்றும் லீ மே கூறியிருக்கிறார்.
நன்றி BBC Tamil
Social Buttons