கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை கடற்கரையில் 25 வயது மதிக்கத் தக்க ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெரிய நீலாவணை சரஸ்வதி வீதி, படைமுகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில் நேற்று திங்கட்கிழமை காலை சடலம் கரையொதுங்கியுள்ளது. ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சடலத்தைப் பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சடலத்தில் ஆங்காங்கே காயங்கள் காணப்படுகின்றன, சடலத்தை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் கடத்தப்பட்டவர்களை இராணுவம் கொலைசெய்து கடலில் வீசிவிடுகிறதோ என்ற சந்தேகம் இதனால் உருவாகியுள்ளதாக விவசாயின் அரசியல் செய்திப்பிரிவின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எம்.டபிள்யூ. இந்துனில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Social Buttons