இந்தியாவின் மிக வயதான பெண்மணியாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த குஞ்சன்னம் உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் மரணமடைந்தார்.
தற்போது அவரது வயது 112. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சூண்டல் அருகே உள்ள பரன்னூரைச் சேர்ந்தவர் குஞ்சன்னம். சிறுவயது முதலே வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருந்து வந்த குஞ்சன்னம், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்துள்ளார்.
காலணி அணியாமல், பேருந்திலும் பயணம் செய்யாமல், ரயில் மற்றும் விமானத்தையும் பார்க்காமல் தனது சொந்த கிராமத்திலேயே எளிய வாழ்க்கை வாழ்ந்த குஞ்சன்னம் குறித்து அவரது குடும்பத்தார் லிம்கா சாதனைப் புத்தகத்திற்கு தகவல் அளித்தனர்.
குஞ்சன்னத்தின் வயதிற்கு சாட்சியாக கடந்த 1903ம் ஆண்டு பரன்னூர் அருகே உள்ள எரானெல்லூர் தேவாலயத்தில் வழங்கப்பட்ட ஞானஸ்நான சான்றிதழ் சமர்ப்பிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வயதான பெண்மணியாக குஞ்சன்னம் அறிவிக்கப் பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் இல்லாமல் இருந்துள்ளார் குஞ்சன்னம். கடந்த திங்கள் முதல் அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திங்களன்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குளுகோஸ் செலுத்தப்பட்டு அவரது உடல்நிலையை தேற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.
வரும் மே 20-ந் தேதி குஞ்சன்னத்தின் 113வது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட அவரது உறவினர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்ததால் உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதன்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons