கடந்த வருடம் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனை இன்று வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 24 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் முதலில் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சபையில் இன்று காலை சமர்ப்பித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது திட்டமிடப்பட்ட தமிழ் இனப்படுகொலை என்பதற்கு சந்தேகமில்லை. நீண்டகாலமாக வடக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் சரியான தீர்வு காணப்படவில்லை.
எனவே உடனடியாக சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வுகாண நடவடிக்கை வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்தப் பிரேரணைக்கு சபையிலுள்ள ஈ.பி.டி.பி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை விரைவில் சிங்கள, தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிடப்படும் என்றும், இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க - தமிழ் மக்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கான - சர்வதேச அரசியல் முன்னெடுப்புக்கான முக்கிய பிரேரணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, பிரேரணையில் ''ஈ.பி.டி.பி.'' என்ற கட்சிப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட எதிரணி உறுப்பினர் தவநாதன், வரலாற்று முக்கியத்துவம்மிக்க இந்த தீர்மானத்தில் அந்த சொற்பதம் நீக்கப்படவேண்டும் என்று கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அந்த சொற்பதத்தை மட்டும் நீக்க உடன்பட்டார். இதனையடுத்து அனைத்து உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தி, தீர்மானத்தை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons