யுத்தக்குற்றச் செயல் விசாரணை தொடர்பில் மேலதிக கால அவகாசத்தை வழங்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தன.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைப் பேரவை விசேட நிபுணர் குழு ஒன்றின் ஊடாக யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா இலங்கை மீது குற்றம் சுமத்தியிருந்த நிலையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்க மேலும் கால அவகாசம் வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அமெரிக்கா திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வாலும் அவரது பிரதிநிதிகளும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அமெரிக்கா, பொதுநலவாய நாடுகள் அமைப்பு, பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தும் வகையிலான நகர்வுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் என இவ் அமைப்புக்கள் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons