இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.க. சிற்றம்பலம் இன்று தெரிவித்துள்ளார்.
சுதந்திரதின நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
1948 இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது உருவாகிய ஒற்றையாட்சி அமைப்பு அதன் பின்பு அழுலுக்கு வந்த அரசியல் அமைப்புக்களும் சிறுபான்மை தேசிய இனங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை ஏற்காது பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கே வழிவகுத்ததால் சுதந்திரமென்பது பெரும்பான்மை மக்களாகிய பௌத்த சிங்கள மக்களே என்ற கோட்பாட்டின் அடிப்டையானது தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட இன்றைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியன மாறி மாறி வந்த சுதந்திரதின வைபங்களில் கலந்துகொள்ளாது அவற்றை பகிஸ்கரித்தது மட்டுமன்றி கறுப்புக்கொடி போராட்டங்களும் நடத்தியதும் வரலாறாகும்.
எமக்கான நியாமான அரசியல் தீர்வு இன்று வரை கிடைக்காத நிலையில் இத் தீர்வை நோக்கித் தம்மையே அழித்த நமது தலைவர்கள், மக்கள், போராளிகள் ஆகியோராது அளப்பரிய தியாகமே இன்று தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்கும் கடப்பாடும் தார்மீக பொறுப்பும் சர்வதேசத்திற்கே உண்டு என்று இன்றும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுப்பி நிற்கின்றன.
இச் சூழலில் எமது போராட்டம் விட்டுச்சென்ற அங்கவீனர்கள், விதவைகள், காணாமல் போனோர், இடம்பெயர்ந்தோர் காட்சிப்பொருளாக இருக்க தமிழ் தேசியத்தின் காவலர்கள் நாமேதான் என்று மார்தட்டிக்கொண்டு சிங்கள இனத்தின் மேலான்மை சின்னமாக விளங்கும் சிங்க கொடியின் கீழ் தமது மனச்சாட்சியையும் மக்களின் தியாகத்தையும் விலை பேசி விட்டு விருந்தோம்புவதை மனச்சாட்சி உள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இவ் ஈனச்செயலை மன்னிக்கவும் மாட்டார்கள்.
ஆதலால் எமது மக்கள் செய்த அளப்பரிய தியாகத்தை மறந்து ஒற்றையாட்சியையும் 13 ஆவது சீர் திருத்தமே எமது மக்களின் தியாகத்திற்கு தீர்வு என்று மட்டுமன்றி சர்வதேச விசாரணைகளையும் மழுங்கடிக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளும் அரசின் விருந்தினராக காட்சி அளிப்பதும் எமது மக்களுக்கும் போராட்டத்திற்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமன்று வேரொன்றும் இல்லை.
இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது. இதற்குரிய தீர்க்கமான மாற்று நடவடிக்கையை பற்றி ஆழமாக சிந்திக்கும் காலம் வந்துவிட்டது.
ஆதலால் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அவர்களின் வழி நடத்தலில் செயற்படாது இவ்விழாவில் கலந்து கொண்டோர் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் மத்திய செயற்குழுவுக்கே உரியதால் இதனை உடனடியாக கூட்டவேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Social Buttons