Latest News

February 09, 2015

இவருக்கு எங்கிருந்து வந்தது இந்த ஜானம்!!!
by Unknown - 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேட இராணுவம் தேவையில்லை ஏனைய மாகாணங்களில் உள்ளவாறு அமைய வேண்டும் என ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   வடக்கு , கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து டக்ளஸ் தேவானந்தா விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,     கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் சில பாதுகாப்புத் தேவைகளுக்கென கைப்பற்றப்பட்டன.

எனினும் 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அப்போதைய அரசுடன் நான் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக  கணிசமான அளவு விவசாய மற்றும் வதிவிடக் காணிகளும் பொது மற்றும் தனியார் கட்டிடங்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன. 

இந்த நிலையில் எமது மக்களின் தலைவர்கள் என தம்மை இனங்காட்டிக் கொள்ளும் நபர்கள் சிலர் இவ் விடயத்தை தங்களது சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்கள் ஊடக அறிக்கைகள் போன்ற கண்துடைப்பு காரியங்களில் மாத்திரமே ஈடுபட்டனர்.

மேலும் குறித்த செயற்பாடுகளை தடுக்கும் வகையில் செயற்பட்டு வந்தனரே தவிர  ஊக்குவிக்கக் கூடிய வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்ற கொள்கை நிலையில் நின்று எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட எமது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக மேற்படி எஞ்சியுள்ள காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடமும் முன்வைத்திருந்தோம்.

இது அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றிருந்தது.  நாட்டில் தற்போது புதிய அரசு ஆட்சியில் உள்ள நிலையிலும் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரிடமும் இக் கோரிக்கையை முன்னுரிமைப்படுத்தி வலியுறுத்தியுள்ளோம்.

எனவே மக்களது நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது கொள்கை அடிப்படையை தொடர்ந்து வலியுறுத்திவரும் நாம் நாட்டில் ஏனைய மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு கருதி இராணுவப் பிரசன்னம் எந்த அடிப்படையில் உள்ளதோ அதே அடிப்படையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இருக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விசேட பாதுகாப்பிற்கோ அல்லது  முகாம்களுக்கோ தற்போது அவசியமில்லை என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
« PREV
NEXT »