Latest News

February 16, 2015

நாடு கடத்தப்படும் தமிழர்கள் மீது விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால் தாக்குதல்!
by Unknown - 0

கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால் தாக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையர்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாட்டுக்கு திரும்பிச்செல்வோர் மற்றும் நாடு கடத்தப்படுவோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரைவதைக்குட்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இத்தாலி அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்ட 6 பேர் விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புத்தூர், சிறுப்பிட்டியை சேர்ந்த 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனையவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் புதிய ஆட்சிக்குப்பின் அமைதி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில், விமான நிலையத்தில் வெளிநாடு செல்பவர்களும் இலங்கை வருபவர்களும் கைது செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து விருப்பத்தின் பேரில் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நாடுகடத்தலை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »