Latest News

February 16, 2015

அகவை இருபத்தைந்தில் விவசாயபீடம் – பேராசிரியர் கு.மிகுந்தன்
by admin - 0

விவசாய பீட கன்னியிவளுக்கு வயது இருபத்தைந்து!, இனியென்ன பல்லாண்டு காலமாக கனவு கண்டிருந்த காலம் கனிந்து வந்திருக்கின்றது. கண்ணின் மணிபோல கவனித்தல் வேண்டும். இனியும் கவலைகொள்ள விடக்கூடாது. ஆனால் அதற்கும் அவதானிப்பும் அரவணைப்பும் அவசியம். பீடத்தின் இளமை தாண்டவமாடும் வயதில் இங்கே பலருக்கு முதுமை எட்டியிருக்கிறது. இருபத்தைந்து வருடங்களாக என்ன செய்தோம் என யோசித்தால் பெரிதாக ஒன்றுமில்லை பல பட்டதாரிகளை உருவாக்கியதை விட. பீடத்திற்கு அகவை இருபத்தைந்து எனும் போது அட நாமும் அந்த இருபத்தைந்து வருடங்களாக இதற்குள்ளேயே வாழ்ந்திருக்கின்றோமே என விழித்துக்கொள்ள முடிகின்றது. கடந்து வந்த பாதை கரடுமுரடானதாக இருந்தாலும் அதற்குள்ளேயே பல நிகழ்வுகள், அதிசயங்கள், அற்புதங்கள் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
விவசாய பீடத்தின் வரலாறு தனித்துவமானது. 1990ம் ஆண்டு 3ம் திகதி டிசம்பர் மாதம் மறைந்த பேராசான் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் துரைராஐாவினால் நாடாவெட்டி ஊர்மக்கள் இன்னும் விவசாய சம்மேளன உறுப்பினர்கள் என பலர் கூடியிருக்க பீடம் ஆரம்பிக்கப்பட்டது. உழைப்பின் பெறுபேறு என்பதனால் ஊரடங்கிய தினத்திலும் மெதுவாக பீடத்து நிகழ்வுகள் மகிழ்ச்சியாக நடைபெற்றதை நாடே அறியும். பீடத்தை ஆரம்பிக்க வைக்க பேராசிரியர் துரைராஐா  துவிச்சக்கர வண்டியிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருகைதந்திருந்தார். 

இந்த வருகை அல்லது பயணம் துன்பம் நிறைந்த துயர் கொண்ட முழுமையான ஓரிரவுக்கானது. தற்போது ஒன்றேகால் மணித்தியாலத்தில் விரைந்து நெடுஞ்சாலையில் பயணிக்க முடிகின்றது.

மங்கள வாத்தியம் வானைப்பிளக்க விவசாய பீடம் இரணைமடுச்சந்தியில் உள்ள விவசாய திணைக்களத்தின் பிராந்திய சேவைக்கால பயிற்சி மையத்திலும் பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும் ஊரடங்கிய தினத்தில் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

பிராந்திய ஆராய்ச்சி நிலையத்தில் ஒருபகுதி விவசாய பீடம் இயங்குவதற்கு இந்நிலையத்தின் அன்றைய பிரதி பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி விவேகானந்தன் அவர்களின் முழுஆதரவும் உதவியும் கிடைத்தமை நினைவு கூரத்தக்கது. தீர்க்க தரிசனமுள்ள பெரிய மனிதர்களின் உதவியினால் இவையெல்லாம் அன்றையதினம் சாத்தியமாயிற்று. அவருடனிணைந்து விவசாயத்திணைக்களத்தில் இதே பிராந்திய ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஆராய்ச்சி உத்தியோகத்தராக ஓய்வுபெற்ற எனது தந்தை திரு வே.குணசிங்கம் அவர்களது முயற்சியும் இதனுள் உள்ளடங்கும். அவர் கொண்ட கனவும் திடசங்கற்பமும் தான் விவசாயதுறையில் எழுதும் இக்கைகளை உள்வாங்கி உயர்ந்தெழ வைத்தது. போர்க்காலத்தில் அதிகமாக துவிச்சக்கரவண்டியில் பயணித்ததால் முள்ளந்தண்டு தட்டுகளில் சேதமேற்பட்டு குறிப்பிட்ட பகுதிகள் உணர்வற்று செயலிழந்து கடந்த ஐந்து வருடங்களாக படுக்கையாகிவிட்டிருந்தாலும் விவசாயதுறையில் அவர்கொண்ட கனவை நிச்சயம் எழுதும் இக்கைகள் நிறைவேற்றும்.
அன்றைய தினம் செய்முறைக்காட்டுனர்களாக பதவியேற்றிருந்ததை பெருமையாக எண்ணுகின்றோம். பீடம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அணி மாணவர்கள் வருகைதந்து வகுப்புக்கள் ஆரம்பமானதையும் மகிழ்வாக நினைவுபடுத்திக் கொள்ளமுடிகின்றது. வை.எம்.சி.ஏ காணியிலும் கட்டத்திலும் வகுப்பறையும் விடுதியும் அமைந்திருந்தது. தற்போது அந்த இடத்தில் பல துறைசார்ந்த கட்டடங்கள் உயர்ந்தெழுந்திருக்கின்றன.
மூலிகைத்தோட்டத்தை காணவில்லை ஆனால் மூலிகைப்பிள்ளையார் இப்பவும் இருக்கிறார். அவருக்காக கட்டடமும் கட்டப்படுகின்றது. தற்போது இருக்கும் IOM  நிறுவன நிலத்தில் 60 அக்கேசியா மாஞ்சியம் எனும் தேனீக்களுக்கான தாவரம் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு நடுகைசெய்யப்பட்டு ஒரு காடு போல ஆக்கியிருந்தோம். கிளிநொச்சியில் நடைபெற்ற போரில் இருதரப்பாலும் எறியப்பட்ட ஏவுகணைகளால் இருந்த மரங்களெல்லாம் அழிவுண்டு ஆக இரண்டு மரங்கள் மட்டும் ஞாபகப்படுத்துவதற்காக தப்பிப்பிழைத்திருக்கின்றன. கால்நடைகளுக்கென வளர்க்கப்பட்ட புற்றரை தற்போது கட்டடங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது.

போரின் வடுக்களை சுமந்து கொண்டுதான் விவசாய பீடம் பயணிக்க வேண்டியிருந்தது. இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களை விட விவசாய பீடத்திற்கு சுமையும், சிக்கலும் இன்னும் இன்னல்களும் அதிகமாகவே இருந்ததை அனைவரும் அறிவர். யாழ்ப்பாணத்தை விட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பீடமொன்றை கிளிநொச்சி நோக்கி நகர்த்துவதனை பலர் விரும்பியும் இன்னும் பலர் விரும்பாமலும் இருந்திருந்தாலும் போராசிரியர் துரைராஐாவினதும் அவருடனிணைந்த அறிஞர்களினதும் தீர்க்க தரிசனம் என்றோ ஒருகாலத்தில் உணரத்தலைப்படும் என்பதில் ஐயமேதுமில்லை. பின்பாக துணைவேந்தரர்களாயிருந்த பேராசிரியர்கள் பாலசுந்தரம்பிள்ளை, குமாரவடிவேல், சண்முகலிங்கன் மற்றும் துணைப்பேராசிரியர் மோகனதாஸ் அவர்களினது உழைப்பும் இதில் உள்ளடங்கும். ஆரம்ப காலங்களில் துறைத்தலைவர்களாயிருந்த பொருளியல் பேராசிரியர் நித்தியானந்தன், கலாநிதி சிவகடாட்சம் ஆகியோரின் பணியும் இங்கே நினைவுகூரத்தக்கது.
தற்போதய துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம் காலத்தில் விவசாய பீடம் அறிவியல் நகருக்கு முழுமையாக நகர்ந்ததை பீடத்தின் மைல்கல்லாகவே கொள்ளவேண்டும். அதனுடன் அன்றைய கனவாக இருந்த பொறியியல் பீடமும் ஆரம்பிக்கப்பட்டு பீடாதிபதி கலாநிதி அற்புதராஐாவின் ஆளுமை கொண்ட தலைமைத்துவத்தில் இரண்டாவது அணியை உள்வாங்கியிருப்பதும், உழைப்பின் அறுவடையெனலாம். பொறியியல் பீடத்திற்காக பேராசிரியர் கந்தசாமியின் உழைப்பு அளப்பரியது. உயர்ந்த மனிதர்களின் அளப்பரிய உழைப்பின் பெறுமதியை இன்று இரு பீடங்களும் அனுபவிக்க தொடங்கியிருக்கின்றன.
அறிவியல் நகரின் தற்போதய பிரதேசம் காடுமண்டியிருந்த போது கால்வைத்தால் எங்கு வெடிக்கும் எனத்தெரியாத நிலையில் கூட சிரேஷட பேராசிரியர் கந்தசாமியுடன் அதனூடாக துணிந்து பயணித்து இடங்களை வரையறை செய்ததை நினைக்கும் போது உழைப்பின் சிறப்பை உணரமுடிகின்றது. தமிழ்பல்கலைக்கழகமாக ஆகவிருந்த நிலப்பகுதியும் அதற்காக கட்டப்பட்ட கட்டடமும் சேர்ந்த 168 ஏக்கருடன் மேலதிகமான 400 ஏக்கரும் சேர்ந்து 568 ஏக்கர் நிலப்பரப்பு இவ்விரு பீடங்களின் விருத்திக்காக கிடைக்கப்பெற்றுள்ளது. அறிவியல் நகர் என அறிவாளிகளினால் பெயரிடப்பட்டு அதில் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கத்திற்காக இடப்பட்ட வித்து இன்று வளர்ந்து கிளைபரப்ப தயாராக இருக்கின்றது. இந்நிலப்பரப்பில் விளையாட்டு விஞ்ஞானத்திற்கான பீடமும் இன்னும் தொழில்நுட்பக்கல்விக்கான பீடமும் அமையப்பெற வேண்டும். மேலும் பீடங்களுக்கு வருகைதருவதற்காக சிறிய புகையிரத நிலையமும் பேராதனையிலுள்ள சரசவியுயன போல தாபிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகமொன்றுக்காக இடப்பட்ட அடித்தளத்தில் தற்போது விவசாய பீடமும் பொறியியல் பீடமும் அமையப்பெற்று பல்லின மாணவர்களையும் உள்வாங்கி உயர்ந்தெழுந்திருப்பது அவற்றின் சிறப்புக்கும் தனித்துவத்திற்கும் அடித்தளமாக அமையும் எனலாம். தற்போது விவசாய பீடமும் பொறியியல் பீடமும் அமைந்திருப்பது ஒருகாலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றுக்காக அத்திவாரமிடப்பட்ட நிலத்திலும் கட்டங்களிலும் தான். இது கல்விக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமாக மாநகர அபிவிருத்தி திட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக இப்போது இரு பீடங்களும் ஓரளவு வசதிவாய்ப்புக்களுடன் இயங்க ஆரம்பித்திருக்கின்றனவென்றால் இதில் பங்குபற்றிய அனைவரினதும் உழைப்பே முக்கிய காரணமாகும்.
விவசாய பீடத்தை அறிவியல் நகரில் மீண்டும் இயங்க வைக்க பலமுயற்சிகள் முன்வைக்கப்பட்டு பல கட்டங்களாக திட்டமிடப்பட்டு இறுதியிலேயே அது சாத்தியமாயிற்று. இந்த முயற்சியில் பதினெட்டு மாதங்கள் பீடாதிபதியாகவிருந்து எழுதும் இக்கைகளும் முன்னின்று உழைக்க நல்லமனிதர்கள்pன் ஆதரவும் கிடைத்தது. இன்று இரு பீடங்களுடன் ஆரம்பித்து கிளிநொச்சி வளாகமாக உயர்ந்து விரைவில் கிளிநொச்சியில் பல்கலைக்கழகமாக உயர்ந்தெழ எழுதும் இக்கரங்களின் வாழ்த்துக்கள். இதற்காக கனவு பல கண்டு தினமும் உழைக்கவேண்டியிருக்கும். பலரிணைந்து தான் வடம்பிடித்து இவ்விரு தேர்களையும் நகர்த்த வேண்டும். பலமாக திட்டமிடப்பட வேண்டும். மக்களுக்கான சேவைசெய்வதில் இப்பீடங்களுக்கு கடமைகளுண்டு. இப்பகுதியில் இப்பிரதேசத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பலரிணைந்து சிரமதானஞ்செய்து சுத்தப்படுத்தியதை நினைவு கூர்ந்தால் அதே மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இப்பீடங்கள் கல்வியால் சிறந்து அவர்களது அறிவையும் செயன்முறைபயிற்சியையும் வழங்கவேண்டும். மேலும் விவசாய பெருமக்களுக்கும் தொழிற்றுறையாளர்களுக்கும் இவ்விருபீடங்களிலிருந்தும் பலத்த எதி;ர்பார்ப்புக்கள் உண்டு. அவற்றை உள்வாங்கி இப்பீடங்களின் வளர்ச்சியிருக்க வேண்டும்.
அன்றைய போர்க்காலத்தில் ஓரிரவு முழுக்க துவிச்சக்கரவண்டியிலும் கப்பல் மற்றும் உழவு இயந்திர பயணத்திலும் கிளாலி, பூநகரி, கொம்படியான், ஊரியான் என பல பாதைகளை ஏற்படுத்தி பயணித்ததையும் அதனூடு விவசாய பீடத்தின் வளர்ச்சியில் பங்கு பற்றியதையும் இன்றும் நினைத்தாலும் உளம்சிலிர்க்கும். விவசாய பீடத்திற்கும் இடம்பெயர்ந்த அனுபவம் பலஉண்டு. கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து கரிப்பட்ட முறிப்புக்கும் பின்பு இடவசதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கும் முழுமையாக இடம்பெயர்ந்து அகதிகளாக ஏறத்தாள 14 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீடத்தின் சில அறைகளிலும் விருந்தினர் மாளிகையிலும் தனியார் வீடுகளிலும் இயங்கியதை வெறுமனே மறந்துவிட முடியாது. சென்றவருடம் செப்டம்பர் மாதம் என திட்டமிட்டிருந்தாலும் டிசம்பர் மாதத்தில் தான் அறிவியல் நகருக்கு விவசாய பீடத்திற்கு நகர்வதற்கு முடிந்தது. நகர்வு நடந்ததிருந்தாலும் இன்னும் பல வசதிகள் கிடைக்க வேண்டும். விவசாய பீடம் மக்களுக்கான சேவையை முழுமையாக செய்யவேண்டிய காலத்தினுள் உள்வாங்கப்பட வேண்டும். விவசாய மற்றும் தொழில்நுட்ப கல்வியை கொடுக்க வேண்டிய கட்டத்தினுள் வந்திருக்கின்றோம். தொழிற்றுறை விருத்திக்கு நாம் முயலவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

முதல் பீடாதிபதி பீடத்திற்கு வராமலேயே இறந்துவிட்டார் என அறிந்து கவலைகொண்டோம். அதன்பின்பு பீடாதிபதியாக பொறுப்பேற்றவர் பேராசிரியர் கந்தையா  தாவரவியல் அறிஞரான  புகழுடன் வாழ்ந்து பீடத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வரும்போதே மரணமடைந்துவிட்டார். இன்னொருவர் எந்திரி விஐயரட்ணம் பீடாதிபதியாகவிருந்து மரணமடைந்துவிட்டார். இருப்பினும் இவர்களுடன் பீடாதிபதிகளாயிருந்த துணைப்பேராசிரியர்கள் நவரட்ணராஐா, மோகனதாஸ் மற்றும் இராசதுரை என்பவர்களின் பங்களிப்பு அளப்பரியது. பீடத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இவர்களது உழைப்பு நிதர்சனமாகும். இடையில் முன்னைநாள் விவசாய ஆராய்ச்சி ஆராய்ச்சி உத்தியோகத்தரான திரு. செந்திநாதன் அவர்களும் சிலகாலம் விவசாய பயிரியல் துறையில் வருகை விரிவுரையாளராக பணிபுரிந்து இடையில் அகால மரணமடைந்துவிட்டார்.
இழப்புக்ளுக்கு மத்தியிலும் அறிவியல் நகரில் டிசம்பர் 15ம் திகதி விவசாய பீடம் முழுமையாக இயங்கத் தொடங்கியிருக்கின்றது. விவசாய பெருமக்களுக்கு விவசயஞ்சார் தொழிலுக்கு, விவசாய மாணவர்களுக்கு விவசாய தொழில்நுட்ப கல்விக்கு முழுமையாக தனது கடமையை விவசாய பீடம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
விவசாய பீடத்தின் பழைய மாணவர் சங்கத்துடனான கூட்டம் கடந்த வியாழக்கிழமை 29.01.2015 விவசாய பீடத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. முதன்முறையாக நடந்த இந்நிகழ்வு விவசாய பீடத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முன்னுதாரணமாக இருக்கும். பழையமாணவர் சங்க பிரதிநிதிகள் திருவாளர்கள் சுந்தரேஸ்வரன், தயாகரன், சஞ்சயன், ஜெகஜீவகன்  மற்றும் சர்மிளி ஆகியோருடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான திட்டமிடலுக்கு உதவுவதாகவும் அமைந்திருந்தது. இவர்களின் மாணவர்களுடனான சந்திப்பு மிகவும் பிரயோசனமாக இருந்ததாகவும் மாணவர்களுக்கு இக்கல்வியூடாக நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது. வெள்ளிவிழாக்காலத்தில் விவசாய பீடம் பலவிதமான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றது. இதனூடாக இப்பீடத்தின் செயற்பாடு முன்னோக்கி நகரும் என்பதில் ஐயமில்லை. விவசாய பீடத்தின் எதிர்பார்ப்புக்கள் திட்டங்கள் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை இதில் உள்வாங்க நினைக்கிறோம். நீங்களும் இதில் பங்குதாரர்களே. வாருங்கள் நினைத்ததை செய்து முடிக்கலாம். இதற்கு முயற்சியொன்றே மூலதனம்.
வெள்ளிவிழாவினை கடந்த 3ம் திகதி இதனை சம்பிரதாயபூர்வமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதி, விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் முன்னைநாள் விவசாய பொருளியல் தலைவரும் பேராசிரியருமான நித்தியானந்தன் மற்றும் பழைய மாணவர்கள் பலருடனும் தற்போதய மாணவர்களுடன் எளிமையான முறையில் மரம் நடுதலுடன் ஆரம்பமானது. பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை அனைவரையும் மகிழ்வுற வைத்தது. மூத்தவர்கள் ஆசியுடன் வெள்ளிவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது சிறப்புக்குரியதாகும். விவசாய பீடத்தின் கனவுகள் பல. தொடர்ச்சியான இடர்களை சந்தித்து தாங்கி உயர்ந்தொழுந்திருக்கின்றதனை பார்க்கும்போது அனைவரும் மெச்சவே செய்கின்றனர். ஒரு பல்கலைக்கழகத்துக்கிணையான பல்கலைக்கழக கட்டடத்தில் மீளப்புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றது.
கிளிநொச்சியில் விவசாய பீடமும் பொறியியல் பீடமும் ஆரம்பமாக வேண்டும் என நினைத்தவர்களின் கனவு பலித்திருக்கின்றது. மக்களின் விருப்பத்திற்கிணைவாக இப்பீடங்கள் கிளிநொச்சியில் அமையப்பெற்றிருக்கின்றன. இரண்டரை தசாப்பதமாக அல்லல்பட்டு அங்குமிங்குமாக ஓடி கிளிநொச்சியில் தனக்கென ஓரிடத்தில் விவசாய பீடம் மீண்டும் செயற்படத்தொடங்கியிருப்பது சிறப்புக்குரியதும் பாராட்டத்தக்கதுமாகும். இது மக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது பல்கலைக்கழகத்தில் விவசாயபீடம் சார்ந்து அனைவருக்கும் உள்ள கடப்பாடாகும். இப்பீடம் தன்மனிதனின் உழைப்பு அல்ல. பலர் சேர்ந்து உருவாக்கிய நிறுவனமிது. இதற்கான வாய்ப்புக்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாய பீடமும் பொறியியல் பீடமும் எமது பிரதேசத்தில் நிச்சயம் மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவையும் மற்றும் அறிவாற்றலையும் விருத்தியடைய வைக்;கும். விவசாய பீடத்தில் கல்விகற்று பட்டதாரிகளாகியுள்ளவர்களும் தற்போது பெரிய பதவிகளிலுள்ளவர்களும்; ஒன்றிணையும் இடமாக இது அமைந்துள்ளதெனலாம். விவசாய பீடத்தின் உழைப்பு விவசாய பெருமக்களின் தேவைகளை அறிந்து அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தொழிற்றுறையை விருத்தி செய்ய இன்னும் பல முயற்சியிலீடுபட தூண்டுதலாக அமையும்.
தற்போதய கல்விமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியமாகும். தொழிற்றுறை சார்ந்து பார்த்தால் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி இவற்றுடன் சுற்றுலாத்துறை என்பனவற்றின் அபிவிருத்தியை மையப்படுத்தி பார்க்கலாம். இவ்வளங்கள் சார்ந்த தொழிற்றுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மேன்மையுற வைக்க வேண்டியது விவசாய பீடத்துடனிணைந்த அனைவரினதும் பொறுப்பாகும். அரசவேலைவாய்ப்பு என்பது இனிவருங்காலத்தில் அதிகளவில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அரிதாகவே இருக்கும். மேலதிகமாக தனியார் நிறுவன வேலைவாய்ப்புக்களை நம்பியே இனி தொழிற்றுறை நகர இடமுண்டு. இந்நிலையில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி தேவையான தொழிற்றுறைகளை விருத்திசெய்ய வேண்டியிருக்கின்றது. க.பொ.த சாதாரண தரம் பயின்ற மாணவர்கள், க.பொ.த உயர்தரம் கற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளாக வெளியேறியவர்கள் என பலருடைய வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் செயற்றிட்டத்தினை நாம் வரையறை செய்ய வேண்டியுள்ளது.
தனியார் தொழிற்றுறைகளுக்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தினாலன்றி இனிவருங்காலத்தில் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியே. இதனை மையப்படுத்தி விவசாயபீடத்தின் கற்றலை தொழில்வாய்ப்புக்கான வினைத்திறனானதாக மாற்றியும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் வேண்டியிருக்கின்றது. தொழிற்றுறைக்களுக்கான பயிற்சிகள் தொடர்;ச்சியாக கொடுக்கப்பட்டாலன்றி அவர்களை தொழிற்றுறைக்குள் முழுமையான வினைத்திறனான தொழிலாளர்களாக உள்வாங்கமுடியாது. இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் அனைவருக்குமான வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும்.
விவசாய பீடத்தின் செயற்பாடுகளை இனிவருங்காலத்தில் விரிவாக்குவதற்கான வழிவகைகளை நாம் விரைந்து கண்டாக வேண்டும். மக்களுக்கான சேவைசெய்யும் காலத்தில் நாம் பயணித்திருக்கையில் விவசாய பெருமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் எம்மாலான தீர்வினை கண்டாக வேண்டும். ஆராய்ச்சியின் மூலமாகவும் கற்றலினை மேம்படுத்தியும் எதிர்கால எதிர்பார்ப்பினை நாம் ஈடுகட்ட முடியும். வியக்கத்தகு செயற்பாடுகளில் மாணவர்களையும் ஈடுபடுத்த அவர்களின் மென்திறனை விருத்திசெய்ய முடியும். அனுபவக்கற்றல் இங்கே முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும். மாணவர்கள் பலதரப்பட்ட அனுபவங்களை உள்வாங்கும் போது அவர்களால் சிறப்பாக தொழிலை செய்யமுடியும்.
விவசாய பீடம் பொறியியல் பீடத்துடனுமிணைந்து இணைந்த கற்கையினை ஆரம்பிப்பதற்கு வழியுண்டு. இருபீடங்களுடனும் முகாமைத்துவபீடம் மற்றும் விஞ்ஞான பீடம் என்பன இணைந்த கற்றை நெறியினையும் இதற்காக முயற்சிக்கலாம். எதிர்காலத்திற்கு தேவையான கற்கை நெறிகளை மையப்படுத்தியதாக எமது கற்கைகளை மீளப்புதுப்பிக்க வேண்டியதனை இதில் வலியுறுத்தி தொடந்து செய்ய வேண்டியவற்றை மக்களிடமும் பட்டதாரிகளிடமும் பெற்று மாற்றியமைக்கலாம். பழைய மாணவர்களின் கருத்துக்களுக்கு இங்கே முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். விவசாயபீடத்தின் பட்டதாரிகள் விவசாய பீடத்தின் சொத்துக்களாகும். இப்பீடத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இதனை நாம் முழுமையாக உள்வாங்க வேண்டும். வாருங்கள் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவே முன்வையுங்கள். நாம் எதிர்பார்த்திருக்கும் பீடத்தை அனைவரும் சேர்ந்து இயக்கலாம். மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்வாங்கி முன்னுயர வேண்டும். இது பீடத்தின் வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு ஐீவனின் வேண்டுகோள்!



« PREV
NEXT »