எமது ஆட்சியில் மீளவும் ஈழம் உருவாகுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. அதற்கு துணைபோவதாக எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என நிராகரித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடமாகாண சபையானது இனப் படுகொலை தீர்மானத்தை அவசரமாக நிறைவேற்றியமை தொடர்பில் தமக்கு கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
அதேநேரம் குறித்த தீர்மானம் மிகவும் கவலையளிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான முறையில் முன்நோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு நேற்று அவர் வழங்கிய விஷேட செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் புதிய அரசியல் முறையை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும். இந் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் ஆட்சி பீடம் ஏறினோம்.
குறித்த இலக்குகளை பொறுமையுடன் கையாண்டு வெற்றி கொள்ள வேண்டும். இதேவேளை புதிய பொருளாதார முறைமையை கொண்டு பத்து லட்சம் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பது நாட்டின் கடன் சுமையினை போக்கி விவசாயம் உள்ளிட்ட நாட்டின் ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதே நோக்கமாகும். அத்தோடு சர்வா திகார ஊழல் மோசடிகளுடனான ராஜபக் ஷ ஆட்சியை தோல்வியடைய செய்து நாட்டின் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவது முக்கிய குறிக்கோளாகும். அதற்காக வேண்டியே மக்கள் வரம் எமக்கு கிடைக்கப் பெற்றது.
மேலும் அரசியல் யாப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 17ஆவது திருத்தச் சட்டத்தை மீள கொண்டு வந்து சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து நீதியை நிலைநாட்டுவதே எமது 100 நாள் வேலைத்திட்டத்தின் அத்திவாரமாகும்.
ஊழலுக்கு எதிரான விசாரணை
மேலும் முன்னைய அரசில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்து வருகின்றோம். குறித்த விசாரணையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதுடன் பொலிஸாரும் இத்தகைய விசாரணையை செய்து வருகின்றனர்.எனவே சட்டத்திற்கு மதிப்பளித்து உரிய வகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு மோசடிகாரர்கள் கைது செய்யப்படுவார்கள். இருந்த போதிலும் இது தொடர்பில் அவசர போக்கினை கடைப்பிடிக்க முடியாது.
ஊடக சுதந்திரம்
2003 ஆம் ஆண்டு கரு ஜெயசூரிய பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த தகவல் அறியும் சட்ட மூலத்திலுள்ள பரிந்துரை கொண்ட தகவல் அறியும் சட்ட மூலத்தை பாராளுமன்ற
த்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். குறித்த சட்டமூலத்திற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் ஆலோசனைகளை பெறவுள்ளோம். இதேவேளை பிரித்தானிய பாராளுமன்ற முறைமையிலிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்தவுள்ளோம்.
ஈழக் குற்றச்சாட்டு
இலங்கையில் மீண்டும் ஈழம் அமைப்பது தொடர்பிலான குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றியது. இது நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். எமக்கு புலிச்சாயம் பூசும் தரப்பினர்களின் கைக்குள்ளே கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், கருணா அம்மான் ஆகியோர் உள்ளனர். மேலும் 2005ஆம் ஆண்டு தேர்தலில் இரகசிய ஒப்பந்தத்தினூடாகவும் பாரிய தொகை நிதியை வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி என்னை தோற்கடித்தார்கள். அதுமாத்திரமன்றி எமது தரப்பினர்களில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை கொலை செய்ய விடுதலை புலிகளே முயற்சித்தனர். எனவே அவ்வாறானதொரு நிலைமையில் விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்ற தேவை எமக்கு கிடையாது. அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.
வட மாகாணசபை பிரேரணை
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எமக்கு கவலையளிக்கின்றது. வடமாகாண சபை ஏன் இதனை அவசரமாக முன்னெடுத்தது என்ற கேள்வி எமக்குள்ளது. எனவே இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஏற்றுக் கொள்ளத் தக்க பரிந்துரைகள் தொடர்பில் மீளப்பரி சீலிக்கவுள்ளோம். மாகாணசபை முறைமையை அமுல்படுத்துவது எமது நோக்கமாகும். தேசிய பிரச்சினை தொடர்பில் கூட்டமைப்புடனும் ஏனைய கட்சிகளுடனும் எதிர் வரும் காலங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம் என்றார்
Social Buttons