Latest News

February 09, 2015

மகிந்தவிற்கு ஆதரவாக மாபெரும் பேரணியொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது!
by Unknown - 0

இலங்கையில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்திருந்த சில கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, தேசிய சுதந்திரக் கட்சியின் தவைர் விமல் வீரவன்ஸ, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, ஹெல உறுமய கட்சியிலிருந்து பிரிந்துவந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்திருந்த உதய கம்மன்பில ஆகியோரே கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 58 லட்சம் வாக்குகளை வென்றிருந்த மகிந்த ராஜபக்ஷவை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்பது தான் தங்களின் நோக்கம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப இலங்கையின் ஆட்சியை அமைப்பதற்கு தற்போதைய புதிய அரசாங்கம் செயற்படுவதாக விமல் வீரவன்ஸ இங்கு குற்றம் சாட்டினார்.

'இலங்கைக்கு தேவைப்படுவது தேசிய அரசாங்கம் அல்ல, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமே' என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இங்கு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றியின் பாதையில் கொண்டுசெல்வதை வலியுறுத்தும் பேரணியொன்று வரும் 18-ம் திகதி கொழும்பில் நடக்கும் என்று விமல் வீரவன்ஸ கூறினார்.
« PREV
NEXT »