Latest News

February 24, 2015

தமிழ்கல்விக்கூடம் இல்போர்ட் (வட கிழக்கு லண்டன்) கலைவிழா 2015.
by admin - 0

 

தமிழ்கல்விக்கூடம் இல்போர்ட் (வட கிழக்கு லண்டன்) கலைவிழா 2015.

வடகிழக்கு லண்டன் இல்போர்ட் தமிழ் கல்விகூடத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவும் கலைவிழாவும் 21.02.2015 சனிக்கிழமை ஈஸ்ட் ஹாம்  லாங்டன் அகாடமியில் நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மாணவர்களின் முயற்சியில் மிகவும் சிறப்பாகவும்,பாராட்டத்தக்க வகையிலும் மிக நேர்த்தியாகவும் நடந்தேறியது.

அகவணக்கம், மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து சிறுவர்களின் பாடசாலை கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. தலைமை ஆசிரியை திருமதி கிரிஜா கனகலிங்கம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாணவர்களின் வணக்கப் பாடலுக்கான நடனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாலர் பாடல்கள், கொன்றைவேந்தன், திருக்குறள், கவிதைகள், அபிநயப்பாடல்கள் என சின்னஞ்சிறார்களின் நிகழ்ச்சிகள் அனைவரையும் வியக்கவைத்தன. மாந்தர்களிடையே ஒற்றுமை பற்றியும், பொதுமறையாம் திருக்குறளை இயற்றி அளித்த திருவள்ளுவர் பெருமை பற்றியும் சிறுவர்கள் எடுத்துரைத்தது அவர்களுக்கான கற்கைநெறியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.




தாயகத்தைப் பற்றிய சிறு உரையும், 'வேர்கள்' நாடகமும் சமூகமளித்தவர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கருத்தாழம் மிக்கவையாக அமைந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியக் கிளையின் இணைப்பாளர், கவிஞர் இராஐமனோகரன் அவர்கள் தன் சிறப்புரையில் தமிழ்மொழிக் கல்வியை சரியான முறையில் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னதுடன், இப்பூமிப்பந்தில் எங்கெங்கு வாழ்ந்தாலும் தமிழ் வாழும்வரை தமிழ் இனம் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்றும் கூறிச்சென்றார்.

மற்றும் இசைநிகழ்ச்சிகள், நடனங்கள். நாட்டிய நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் விழாவைச் சிறப்பித்ததுடன் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துபவையாகவும் அமைந்தன.

இறுதியாக 'புதியகோணம்' என்னும் நாடகமும் மாணவர்களுக்கான பரிசளிப்பும், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன. தாயக உணர்வைத் தொட்ட நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.

நம் இளம் சிறார்கள் பங்குகொண்ட இவ்விழா சர்வதேச தாய்மொழி தினமான 21.02.2015 இல் அவர்கள் தம் தாய்மொழியைப் போற்றி ஆராதிக்கும் வகையில் அமைந்திருந்தது.

தமிழ் கல்விக்கூடங்களின் வளர்ச்சி செம்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழினத்தின் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை.

நன்றி ஈழம் ரஞ்சன் 
« PREV
NEXT »