Latest News

February 24, 2015

அரசாங்கம் அளித்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
by Unknown - 0

மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கொலையுண்டவர்கள், அழுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் உள்ளிட்ட ஜனநாயக விரோத நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன எனினும், ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 50 நாட்களை அண்மிக்க உள்ள நிலையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

காணாமல் போன அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது எனவும், காணாமல் போன லலித் குகன் ஆகியோர் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவரது மகள் விபூசிகா தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னனி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அழுத்தம் காரணமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள ஊடகவியலாளாகளை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரியுள்ளது என்ற போதிலும் இதுவரையில் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பக்கூடிய பின்னணி உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »