சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வலியுறுத்தி, யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் 24-02-2015 அன்று ‘பொங்கு தமிழராய் ஒன்றிணைவோம்’ என அறைகூவலுடன் ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துக் கொள்கின்றது.
‘பொங்கு தமிழராய் ஒன்றிணைவோம்’, ஈழவிடுதலைப் போராட்ட தடத்தில் மக்கள் எழுச்சியின் குறியீடாக ‘பொங்குதமிழ்’ உள்ளது.
இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் உள்ளான தமிழீழத் தாயக மக்கள் , தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் தங்களின் அரசியல் பெருவிருப்பினை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் பொங்குதமிழ் எழுச்சியாக பொங்கியெழுந்திருந்தனர்.
அன்று, தமிழர் தாயகத்தில் பெருக்கெடுத்த மக்கள் எழுச்சி, நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழர் தேசங்களெங்கும் எழுச்சிப் பெருக்கெடுத்திருந்தது.
இன்று, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்காவின் அடக்குமுறைக்குள் நின்றவாறு அனைத்துலக சமூகத்தின் செவிப்பறைகளை உரக்கத்தட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போராட்டம் தமிழர் தேசத்தின் மனச்சாட்சியின் குரலாக உரக்க ஒலிக்கட்டும்.
அனைத்துலக விசாரணையினால் ஏற்படப்போகும் அபாயங்களில் இருந்து சிங்கள தேசம் தன்னுடைய நலன்களை பாதுகாகத்துக் கொள்வதற்காக, ஆட்சிமாற்றம் எனும் புதிய ஒப்பனையுடன், தமிழினஅழிப்பின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அனைத்துலக அரங்கில் மூடிமறைத்து வருகின்றது.
தமிழர் தேசத்தின் மீதும் தமிழினத்தின் மீது சிங்களமயமாக்கல் பௌத்தமயமாக்கல் இராணுமயமாக்கல் என தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பினை இற்றைவரை சிறிலங்கா அரச இயந்திரம் மேற்கொண்டு வருகின்றது.
1983ம் கறுப்பு யூலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதி முதற்கொண்டு இற்றைவரை அனைத்துலக சமூகத்தினை பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு ஏமாற்றியும் நாடகமாடியும் வருகின்றது.
இதனொரு அங்கமாக சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையினை மையப்படுத்தி அனைத்துலக விசாரணையினை இல்லாதொழிக்கின்ற தந்திரோபாயங்களில் ஒன்றாக உள்ளக விசாரணை குறித்து சிறிலங்கா பேசிவருகின்றது.
இத்தருணத்தில் சிங்களத்தின் இத்தந்திரோபாயங்களை அம்பலப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டம் முக்கியமானதொன்றாக அமைகின்றது.
சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத ஐ.நா மனித உரிமைச்சபை அமர்வில் வாய்மூல அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இன்நாளில் (24-02-2015) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இனப்படுகொலையாளிகளை பாரப்படுத்துமாறு ஐ.நாசபையினைக் கோரும் ஒருமில்லியன் ஒப்பங்களை பெறும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றினையும் தொடங்குகின்றது.
இவைகள் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரும் செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும், தமிழகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்றுகின்றன.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
Social Buttons