ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமைய நேற்று அதன் தலைமைத்துவத்தை கைப்பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்காலத்தில் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்து அதன் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் 12 ஷரத்திற்கு அமைய அந்த கட்சியின் அங்கத்தவர் ஒருவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால், அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு கட்சியின் தலைமைத்துவம் அதிகாரபூர்வமாக கைமாறும்.
அத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யும் போது அத்துரலியே ரத்ன தேரரின் தூய்மையான நாளை அமைப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் இ்நத இணக்கத்தின் அடிப்படையிலேயே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
இதனால், ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருக்கும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றங்களை செய்து கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
Social Buttons