Latest News

January 17, 2015

கழிவு எண்ணெய்யால் நஞ்சான நீர்- சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டம்!
by Unknown - 0

கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கான நீதியைக் கோரி சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக  ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் நிலைமையை சீராக்க ஆபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   இன்று காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் வட மாகாண சபையின் விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எஸ்.கஜதீபன், கே.சர்வேஸ்வரன், தமித்த்தேசிய முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

கழிவு ஒயில் கலப்பது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசுவது குறித்த மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடமும், வட மாகாண முதலமைச்சருக்கான மகஜரை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனிடமும், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கான மகஜரை அவரது இணைப்பாளரிடமும் வழங்கினார்கள். 

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கழிவொயில் பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டதால் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளின் கீழ்வரும் பெருமளவான கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளது. 

தொடர்ந்தும்  யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் நிலத்தடி நீரூடன் கலந்து கழிவொயில் வேகமாக பரவி வருகிறது.

கழிவெண்ணெய் கலந்த இந்த நீரைப் பயன்படுத்துவோர் புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறப்பில் குறைபாடு உட்பட உயிராபத்தை ஏற்படுத்தும் பல நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.   இந்த நிலையில் நீதி கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நேற்று குறித்த வழக்கு மீதான விசாரணை இடம்பெற்றது. 

இந்த நிலையில் தமக்கு விரைவில் நீதியைப் பெற்றுத்தரவேண்டும், பாதிப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுத்து அவற்றை வெளியேற்ற வேண்டும். பாதிப்புக்களை சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 



« PREV
NEXT »