Latest News

January 18, 2015

இராணுவத்திற்கு நெருக்கமாக இயங்கிய சிலரால் அச்சுறுத்தல்: கிளிநொச்சி ஊடகவியலாளர் பொலிஸில் முறைப்பாடு
by admin - 0

கிளிநொச்சியில் இருந்து இராணுவத்திற்கும் ஈபிடிபிக்கும் நெருக்கமாக கடந்த காலத்தில் இயங்கிய சில ஊடகவியளாலரகளால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 

சின்னராசா சிவேந்திரன் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சிப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிவதுடன் சுயாதீனப் பத்திரிகையாளராகவும் இவர் இயங்கி வருகின்றனர். 

தன்னைப் பயமுறுத்திய குறித்த ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் இராணுவத்திற்கு நெருக்கமாக செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. அவர்கள் தன்னை அவதூறாக பேசியதாகவும் தனக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட பாராமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணனி வழங்கியபோது தான் அதைப் பெறவில்லை எனத் தெரிவிக்கும் சின்னராசா சிவேந்திரன்  அதன் பின்னரே குறித்த நபர்கள் இவ்வாறு தொந்தரவு தந்ததாக குறிப்பிட்டார். 

கடந்த சில மாதங்களின் முன்னர் தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் வழி மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் சின்னராசா சிவேந்திரனை பாரவூர்தி ஒன்றில் தள்ளி கொலை செய்யவும் முயற்சித்தமை தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த சம்பவத்திற்கு குறித்த ஊடகவிலாளர்கள் பின்புலமாக இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஊடகவியலாளர் சின்னராசா சிவேந்திரன் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் குறித்த நபர்கள் முன்னைய காலத்தில் இராணுவ மற்றும் முன்னைய அரசிற்குச் சார்பாக செயற்பட்டதாகவும் அத்துடன் தாம் ஊடகவியலாளர் எனக் காட்டி மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு அச்சுறுத்தும் ஊடகவியலாளர்களில் ஒருவர் அரச தொலைகாட்சியில் பணியாற்றுவதுடன் மற்றையவர் பிரபல கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.

மற்றைய பத்திரிகையாளர் இராணுவ மற்றும் அரச தரப்புக்களுக்காக செய்தி வெளியிட்டமைக்காக யாழ் பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கடமையிலிருந்து விலக்கப்பட்டார் என்றும் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தச் செய்தி குறித்து உரிய தரப்பினர் தமது பக்க கருத்தை அனுப்பி வைக்கும் பட்சத்தில் குளோபல் தமிழ்ச் செய்திகள் அதனை முழுமையாக பிரசுரிக்கும் என்பதனை அறியத் தருகிறது.


 
« PREV
NEXT »

No comments