இலங்கை வரலாற்றில் சதி நடவடிக்கையொன்றில் சம்பந்தப்பட்டுள்ள முதலாவது பிரதம நீதியரசராக குற்றப்புலனாய்வினரால் இன்றைய தினம் விசாரிக்கப்பட்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கௌரவமாக பதவி விலகுவதற்கான வாய்ப்பு கைநழுவிப் போவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில் தேர்தல் தினத்தன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பல்வேறு புதிய தகவல்களும் வெளியாகிவரும் நிலையில் இச்சதி நடவடிக்கையில் மொஹான் பீரிஸ் தொடர்புபட்டிருப்பதற்கான சாட்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆஜராகக்கூடும் என ஆளுந்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான ஒரு இக்கட்டான நேரத்தில் அவர் அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் ஏன் இருந்தார் எனும் கேள்வியெழுப்பப்பட்டிருக்கும் அதேவேளை இது ஒன்றே அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்குப் போதுமானது என சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
தான் அங்கிருந்ததை மறுக்கமுடியாத நிலையில் இருக்கும் மொஹான் பீரிஸ் ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை வழங்கவே தான் அங்கு சென்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விளக்கமளித்ததன் மூலம் தான் அங்கிருந்தமையை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment