தற்போது ஆட்சி மாற்றமானது தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடியதல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஆனைக்கோட்டை கூழாவடிப் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள மக்களின் காணிகளை இராணுவத்தினருக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 21.05.2015 காலை 8.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது கடந்த 5ஆம் திகதி இராணுவ முகாம் அமைந்துள்ள மக்களின் காணிகளை 38 வது சிங்கறெஜிமென்டின் 11 வது அணிக்கு தலைமைக் காரியாலயம் அமைப்பதற்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கச்சேரியில் இருக்கக் கூடிய காணிப் பகுதியினரால் சண்டிலிப்பாய் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுஅவர்களுடாக அக் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த மக்கள் கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாற்றம் ஏற்படும் என நினைத்து அத் தேர்தல் முடியும் வரை காத்திருந்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை அதன் பிறகு அந்த மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று விடயத்தைத் தெரிவித்தும் , அவர்கள் கூறியது போல் வருகின்ற 21ஆம் திகதி (இன்று ) இராணுவத்தினரிடம் காணி கையளிக்கப்படும் எனக் கூறியிருந்தார்கள்.
அதன் பின் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகிய எங்களிடம் இவ் விடயத்திற்கு ஆதரவு தரும்படி கோரியிருந்தனர். இதனடிப்படையில் இன்றையதினம் இங்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து நேற்றைய தினம் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டிருந்தோம் இதனை அறிந்த சம்பந்தப்பட்ட தரப்பினரும், மற்றும் அரசியல் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் அக்காணியை தற்காலிகமாக வழங்குவதை இடை நிறுத்தியிருக்கின்றார்கள்.
இந்த விடயம் ஒரு வகையில் வரவேற்கக் கூடியது தான் ஆனாலும் அவ் ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நிரந்தர நன்மையும் கிடைக்கப் போவதில்லை. உண்மையில் 30 வருட கால போராட்டத்தில் எமது மக்கள் இழந்த உயிர்கள் சொத்துக்கள் காணிப்பறிப்புக்கள் கொஞ்சமல்ல இவற்றிற் கெல்லாம் நிரந்தரமான ஒரு தீர்வு வேண்டும் அதுவரைக்கும் எமது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்.
இந்த ஆட்சி மாற்றத்தில் நன்மைகளைப் பெறுபவர்களாக பாதிக்கப்பட்ட மக்களே இருக்க வேண்டும். அவர்களுக்கே அது போய்ச் சேர வேண்டும் அது தவிர ஆட்சி மாற்றம் வந்த பின்பு அதனால் ஒருமாற்றம் ஏற்படுமாக இருந்தால் இன்றைய தினம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இந்தக் காணி அபகரிப்பு நிகழ்வினை முற்று முழுதாக இல்லாமல் செய்திருக்க வேண்டும்.
இக் காணிகளை சொந்த மக்களிடம் கையளிப்பதாக கூறியிருக்க வேண்டும். இவ்வாறு எதுவுமே கூறப்படாது தற்காலிகமாக இடை நிறுத்துவதென்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. என தெரிவித்ததோடு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் கூட தமிழ் மக்களின் இவ்வாறான போராட்டங்களில் உளவுத்துறையினரின் நடமாட்டமும் அதிகரித்தே காணப்படுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் இந் நிகழ்வினை படம் பிடித்துச் செல்வது எல்லாம் ஆட்சிமாற்றத்தில் எதுவுமே மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டியே நிற்கின்றது எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர்கள், காணிஉரிமையாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons