Latest News

January 04, 2015

மஹிந்த அரசியல் தீர்வைத் தரவில்லை, மைத்திரி தருவார் என்பதற்காக யாரும் வாக்களிக்க வேண்டாம்!- பா.அரியநேத்திரன்
by admin - 0

மஹிந்த அவர்கள் அரசியல் தீர்வைத் தரவில்லை மைத்திரி அவர்கள் தருவார் என்பதற்காக யாரும் வாக்களிக்க வேண்டாம் அவ்வாறு அவர் தருவார் என்று யாரும் நினைக்கவும் வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதி கூட்டம் நேற்று சனிக்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது. 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், 

நாங்கள் 65 வருடங்களாக எமது விடுதலைக்காக அகிம்சை ஆயுத ரீதியில் போராடியவர்கள் ஆனால் எமக்கு விடுதலை கிடைக்கவில்லை. அந்த விடுதலைக்கான வேலைத்திட்டம் போராட்டம் என்பது சர்வதேசத்தினுடாக மாற்றுவழி வேலைத்திட்டத்தினூடாக எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இதனூடாகத்தான் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கின்றோம். இதில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் ஆனால் இதில் இருவருக்கு மட்டும் தான் வெற்றி தோல்வி திர்மானிக்கப்படுகின்றது.

இந்த 19 பேரில் 12 பேர் மஹிந்தவிற்கு ஆதரவானவர்கள் 04 பேர் மைத்திரிக்கு ஆதரவானவர்களாக இருக்கின்றார்கள். இந்த இரண்டு வேட்பாளர்களில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் எமது கேள்வி. 

2005ம் ஆண்டு தேர்தலில் இந்த ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்களித்தோம் அவர் எங்களுக்கு எவ்வித உறவும் இல்லை. எமது இலக்கு எங்கள் இனத்தை எமது இடத்தை எமது பண்பை எமது கலை கலாச்சராத்தினை அழித்த ஒருவரை நாம் ஆதரிக்கக் கூடாது என்பதற்காகத் தான் நாம் இவ்வாறு செய்தோம். 

இப்போது சமாதானம் வந்து விட்டது என்று கூறுகின்றார்கள், இந்த சமாதானமான சூழலில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். 

நாம் சுதந்திரமாகத்தான் வாழுகின்றோமா சுதந்திரமாக கூட்டத்தினைக் கூட்டுகின்றோமா சுதந்திரமாக பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அழைத்துச் செல்லுகின்றோமா சுதந்திரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிகழ்வை நடாத்த முடிகின்றதா நாம் நடாத்துகின்ற கூட்டங்களில் மக்களைவிட புலனாய்வாளர்கள் எம் பின்னால் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

இந்தப் போராட்டாம் காரணமாக ஏறக்குறைய 12,000 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ததாக இந்த அரசாங்கம் தெரிவிக்கின்றது ஆனால் இவ்வாறு விடுதலை செய்த முன்னாள் போராளிகள் வீட்டில் சுதந்திரமாக உறங்க முடிகின்றதா இல்லை. இன்னும் அவர்களை பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். 

போரினை முடித்து வெற்றி விழா கொண்டாடிய இந்த மஹிந்த அரசாங்கம் இன்றும் 500 சிறைக்கைதிகளை வைத்துக் கொண்டிருக்கின்றனார். அந்த கைதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்கள் வெளியில் இருக்கின்றார்கள். 

ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற போது ஒரு 500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் என்று அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் கருணா பிள்ளையான் டக்ளஸ் போன்றவர்கள் இந்த ஜனாதிபதியிடம் கூறுவதற்கு முதுகெலும்பு இல்லை. இவர்கள் சமாதானம் வந்திருக்கின்றது வீதியைப் போட்டுத் தந்திருக்கின்றார்கள் பாலம் போட்டுத் தந்திருக்கின்றார்கள் அவருக்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள். 

ஆனால் எமது தமிழ் மக்கள் நன்றிக்கடன் செலுத்துவதை மறுப்பவர்கள் அல்ல ஆனால் வாக்குரிமைக்கும் நன்றிக்கடனுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. வாக்குரிமை என்பது ஒரு இனத்தின் விடுதலைக்காக ஒரு அரசியல் பயணத்திற்காக அடுத்த இலக்கை அடைவதற்காக சர்வதேச ரீதியாக எமது பலத்தைக் காட்டுவதற்காக நாம் இடுகின்ற புள்ளடியை நன்றிக்கடன் என்ற பேரில் நன்றி கெட்டவர்கள் கேட்கின்றார்கள் என்றால் அதைவிட வெட்கக் கேடு இல்லை. 

அண்மையில் பிரதியமைச்சர் அவர்கள் கூறியிருந்தார் தன்மானமுள்ளவர்கள் தமிழ் மக்களுக்கு வாக்களியுங்கள் என்று அதனை யார் கூறியிருக்கின்றார். தன்மானமில்லாமல் பச்சோந்தியாக துரோகியாக காட்டிக்கொடுத்து அரசுக்குப் பின்னால் நிற்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் இதனைக் கதைக்கின்றார். 

தன்மானத்தைப் பற்றிக் கதைப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது. எத்தனை பேரை விடுதலைப் போராட்டத்திற்கு வாருங்கள் என்று வலிந்து இழுத்தார்கள். வலிந்திருந்தவர்கள் எல்லாம் இன்று எங்கே அவர்களை கொன்றுவிட்டு தன்மானத்தைப் பற்றி பேசுகின்றார்கள். 

அண்மையில் ஜனாதிபதி செல்லும் இடங்களில் எல்லாம் பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சுகின்றார். நான் நினைக்கின்றேன் பிள்ளைகளை தூக்கிப் பார்த்து விட்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு திட்டம் தீட்டுகின்றாரோ தெரியவில்லை. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்லுகின்றது ஐ.நா விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது. எமக்கு சர்வதேச விசாரணை தேவை என்று நாங்கள் கூறுகின்றோம் ஆனால் சிலர் கூறுகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று. தேர்தலைப் பகிஸ்கரிப்பதும் தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை ஆதரிப்பதும் ஒன்றுதான். நேரடியாக ஆதரியுங்கள் என்று கூறாமல் மறைமுகமாக பகிஸ்கரியுங்கள் என்று கூறுகின்ற வார்த்தையானது அவரை ஆதரியுங்கள் என்ற கருத்தையே தோற்றுவிக்கின்றது. 

எனவே இவருக்கு எதிராக மக்கள் போடுகின்ற புள்ளடியை இல்லாமல் செய்து விட்டால் அவர் தானாகவே ஜனாதிபதியாக வந்து விடுவார் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். எமது மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இந்த குடும்ப ஆட்சி சர்வாதிகார ஆட்சி, ஊழல் ஆட்சி என்று பல கோணத்தில் இந்த அரசை எதிர்த்து பலர் இன்று ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள்.

இலங்கையில் இருக்கின்ற பல கட்சிகள் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றார்கள். மஹிந்த அவர்கள் அரசியல் தீர்வைத் தரவில்லை மைத்திரி அவர்கள் தருவார் என்பதற்காக யாரும் வாக்களிக்க வேண்டாம் அவ்வாறு அவர் தருவார் என்று யாரும் நினைக்கவும் வேண்டாம். 

ஆனால் இந்த வாக்களிப்பு என்பது தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை தமிழர்கள் ஏற்கவில்லை, எங்களுக்கு எதிராகவே நாங்கள் இன்றும் இருக்கின்றோம் என்பதைக் காட்ட வேண்டும். 

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் இடம்பெற்ற தேர்தலைக்கூட மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில் உறுதியாக இருந்தார்கள். 

எனவே ஆட்சி மாறும் மாறாமல் விடலாம் மஹிந்த தோற்பார் அல்லது வெல்லலாம் மைத்திரி தோற்கலாம் அல்லது வெல்லலாம், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லும் தமிழ் தேசியம் வெல்லும் என்பதைத்தான் நாம் காட்ட வேண்டும். வடகிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என்ற செய்தியைத் தான் நாம் காட்டவேண்டும் என்று தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments