Latest News

January 08, 2015

லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் அனுப்பப்பட்ட கடிதம் கசிந்தது !
by Unknown - 0

பாதுகாப்புப் படைகளின் பிரதானி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் கடந்த 24ம் திகதி இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள இரகசிய கடிதம் கசிந்துள்ளது.

அதில் தேர்தல் நடாத்தப்படும் தினத்தன்று இராணுத்தினர் எத்தகைய அவசர சூழ்நிலையிலும் செயற்படும் விதத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் நீதியான ஒரு தேர்தலுக்காக பாதுகாப்பை வழங்கி ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை சாரும் என்றாலும், பொலிசாரால் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற முடியாத விடத்து அந்தந்தப் பிரதேசங்கிளில் உள்ள இராணுவப் பிரிவுகள் பொலிசாருக்கு ஒத்துழைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்தை நிலைநிறுத்தும் இடங்கள் தொடர்பான திட்டமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணமானது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இராணுவத்தை அங்காங்கே நிலைநிறுத்தி மக்களை பீதியடையச் செய்து வாக்களிப்பதிலிருந்து மக்களை தடுக்க அரசு தரப்பு செய்யும் ஓர் உத்தி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்

தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் 65,000 பொலிசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கும் நிலையில், பொலிசாரால் தமது பணிகளை திறம்பட செய்ய முடியாது என்று லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய எவ்வாறு ஊகித்தார் என்பது அறியப்படாமல் உள்ளது.

தேர்தல் காலச் சட்டப்படி, தேர்தல் ஆணையாளர் அல்லது பொலிஸ்மா அதிபருக்கு மாத்திரமே இராணுவத்தின் பிரசன்னம் தேர்தல் காலத்தில் அவசியமா இல்லயைா என்பதை தீர்மானிக்க அதிகாரம் உள்ளது.

அவ்வாறிருக்க முன்கூட்டியே நாட்டில் இராணுவத்தின் பிரசன்னத்தை வலியுறுத்தி அதற்கான திட்டத்தையும் பாதுகாப்புப் படைப் பிரதானி வெளியிட்டிருப்பதானது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

இன்று (08) வியாழக்கிழமை கொழும்பில் இராணுவத்தை நிலைநிறுத்துவது தொடர்பில் மக்களுக்கு அறியத்தரும் நோக்கில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இராணுவத்தால் நடைபெறவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல்களின் பின்னர் தலைநகரில் குழப்பத்தை உருவாக்க திட்டமிட்டு வருதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இச்சந்திப்பில் இராணுவத்தினர் தரப்பில் காரணம் சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



« PREV
NEXT »