எப்படியாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஜனாதிபதியை விட மும்முரமாக இருந்த அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமாக இருந்த கோத்தபாய ராஜபக்ச இராணுவ பலத்தைப் பிரயோகித்து ஆட்சியில் நீடிக்க முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரும் பொது எதிரணி தொடர்பில் முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவருமான அதராலியே ரதன தேரர்.
ரூபவாஹினி நிகழ்ச்சியொன்றில் வைத்தே இவ்வாறு தகவல் வெளியிட்ட அவர், தேர்தல் ஆணையாளர் அதன் விபரங்களை வெளியிடவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை அதிகாலை மகிந்த சலனமின்றி இருந்த போதும் கோத்தபாய யாருடனும் பேசாமல் அமைதியின்றிக் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு செயலக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதில் தெளிவாக இருந்த மகிந்த இது தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லையெனவும் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு எதுவுதி முயற்சிகளும் செய்யவில்லையெனவும் சில முன்னாள் அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னணி வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து கோத்தபாய இன்று விலகிக்கொள்வதாக அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment