யாழ்ப்பாணம் போதனா ஆஸ்பத்திரியில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் 127 பேரையும் சுகாதார உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ். போதனா ஆஸ்பத்திரியில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிவரும் 127 பேரையும் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி அவர்களை சுகாதார உதவியாளர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபாலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் பற்றாக்குறை தீவிர நிலையை அடைந்துள்ளதால் தொண்டர் அடிப்படையில் பணியாற்றவென 127 பேர் 2013ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் நாளொன்றுக்கு ரூபா 75.00 கொடுப்பனவுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.ஆனால் அக்கொடுப்பனவு ரூபா175.00 வரை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த மூன்று மாத காலமாக அக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
யாழ். போதனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்டிருக்கும் இந்நிலைமை குறித்து இலங்கை குடியரசு சுகாதார சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டாக்டர் சேனாரட்னவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
இவ்விடயத்தை சங்கத்தின் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துக் கூறினர்.இதன் அடிப்படையிலேயே அமைச்சர் மேற்படி ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையில் அமைச்சின் செயலாளர் கலாநிதி டி. எம். ஆர். பி. திசாநாயக்கா, மேலதிக செயலாளர் (சுகாதார சேவைகள்) டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Social Buttons