Latest News

January 27, 2015

க.பொ.த சா. தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு!
by Unknown - 0

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவ மாணவிகளுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று எதிர்வரும் 30ஆம் திகதி கம்பஹா மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

'க.பொ.த. சாதாரண தரத்தின் பின்பு' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வானது ஆளணி மற்றும் தொழில் காப்புறுதி திணைக்களத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி தொடக்கம் 1.30 நடைபெறவுள்ள இந்நிகழ்வில் க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றிய மாணவர்களின் சிந்தனையை மேம்மபுத்துவதுடன் தொழில் வாய்ப்பிற்கேற்றாற்போன்று க.பொ.த உயர்தரத்தில் தோற்றவேண்டிய பாடங்கள் தொடர்பில் அறிவூட்டும் நோக்கிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 

க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதாயின் கணித பாடம் கட்டாயமாக சித்தியடைதல் வேண்டும். உயர்தர பரீட்சைக்கு கணித பாடம் தேவையில்லை என கடந்த அரசு கொண்டு வந்த திட்டம் முற்றாக ஒழிக்கப்படும் .உயர்தரத்துக்கு கணிதப்பாட சித்தி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார் .

கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அமைச்சர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் - உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காண்பிப்பதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு கடந்த அரசு காலத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார் .

தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே கல்வி அமைச்சின் நோக்கம். மாணவர்களின் தரத்துக்கு கல்வியை கீழ் மட்டத்துக்கு கொண்டு வருவது எமது நோக்கமல்ல. என்று கூறிய அமைச்சர் கடந்த காலங்களில் கணித பாடத்தில் சித்தியடையும் 35 புள்ளிகள் அடைவு மட்டத்தை சுமார் 18 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிகிறோம். இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

பரீட்சை திணைக்களம் என்பது சுயாதீனமாக இயங்க வேண்டியது. எனினும் கடந்த காலங்களில் இங்கு அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன .கடந்த காலங்களில் பரீட்சை பெறுபேறுகளையும் கல்வி அமைச்சரே வெளியிட்டார். நீங்களும் அதேபோன்று வெளியிடுவீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களம் என்பது சுயாதீனமாக இயங்க வேண்டியது. அதனாலேயே நல்லாட்சி என்ற ரீதியில் சுயாதீன ஆணைக்குழுக்களையும் கொண்டுவர நாம் தீர்மானித்திருக்கிறோம்.பரீட்சை பெறுபேறுகளின் படி ஏன் இந்த மாவட்டம் பின்தங்கியிருக்கிறது.அதற்கு காரணம் என்ன? இதனை நிவர்த்திக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி மட்டுமே அமைச்சு என்ற ரீதியில் நாம் செயற்படவிருக்கிறோம்.

அத்துடன் வினாத்தாள் தயாரிப்புக்கான குழுவும் சுயாதீனமாக இயங்க வேண்டும். அரசியல் சார்பு இல்லாத நிபுணத்துவம்இ சிரேஷ்ட தன்மை, கொண்ட பேராசிரியர்கள், கலாநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகளும் ஒழுங்குபடுத்தப்படுவதற்கென தனியான பிரிவொன்று கல்வி அமைச்சில் ஏற்படுத்தப்படவுள்ளது.அனைத்து சர்வதேச பாடசாலைகளும் முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர கல்வி அமைச்சுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையிலேயே உள்ளன. இவை வர்த்தக ரீதியாக செயற்படுகின்றன. இதனை முழுமையாக கண்காணிக்க தனியான பிரிவு ஏற்படுத்தப்படும்.

வருடம் தோறும் சர்வதேச பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அனுமதிப்பத்திரம் வழங்கும். பாடசாலையின் தரம் மற்றும் மாணவர்களின் கல்வித் தரம், கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் தரம், தகுதி என்பன தொடர்பாகவும் இந்த விசேட பிரிவு ஆய்வுகளை மேற்கொள்ளும்.கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இதுதொடர்பாக நேரடியாக சென்று ஆராய்ந்து அதனடிப்படையிலேயே வருடாந்தம் அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.எதனோல் இறக்குமதி செய்பவர்கள் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
« PREV
NEXT »