Latest News

January 14, 2015

ஐ விமர்சனம்
by admin - 0

நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், ராம்குமார், உபேன் படேல், சுரேஷ் கோபி, ஓஜாஸ் ரஜனி

ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்கள்: கபிலன், கார்க்கி

தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ்

இயக்கம்: ஷங்கர்


இரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம்.



வட சென்னையைச் சேர்ந்த லிங்கேசன் என்கிற லீ (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல மாடல் அழகியான எமி ஜாக்சனின் தீவிர ரசிகர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டழகனான லீயின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லீயை நடிக்க வைக்கிறார். சீனாவில் விளம்ப ஷுட். ஆரம்பத்தில் நடிக்க கூச்சப்படும் லீயை சகஜமாக்க, விளம்பர இயக்குநரின் ஆலோசனைப்படி காதலிப்பது போல நடிக்கிறார். இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுணரான திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் உடல் அழகைப் பார்த்து மோகம் கொள்கிறார். லீயை எமி உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைப் போட்டுக் கொடுக்கிறாcglnfர். உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், சமாதானப்படுத்திக் கொள்கிறான் லீ.

லீ - எமி நெருக்கத்தைப் பார்த்த உபேன் பட்டேல், லீயை காலி பண்ண ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் அபாரமாய் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது தானாக காதல் வருகிறது எமிக்கு. இருவரும் புகழ்பெற்ற மாடலாக ஜொலிக்கும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயமும் செய்கிறார்கள். அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழக்கிறான். முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ஏற்படுகிறது. யாரால் ஏற்படுகிறது என்பது மீதி.

முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை க்ரைம் - ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.


சீனாவின் இயற்கை அழகுகளையும் அந்த ஹல்லேலுஜா மலைத் தொடர்களையும் பளிங்கு நதிகளையும் வெல்வெட் பூத்த பூமியையும் அலுப்பு சலிப்பு இல்லாமல் ரசிக்கும் அளவுக்கு படம்பிடித்த பிசி ஸ்ரீராமுக்கு பெரிய சல்யூட். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலில் எமியும் விக்ரமும் பறவைகள் போல பறந்து பறந்து காற்று வெளியில் இணைவதுபோல காட்சிப்படுத்தியிருப்பார் ஷங்கர். ரசனையான காட்சி.

விக்ரம்... இவரை வெறும் நடிகர் என்று சொல்லிவிட்டுக் கடப்பது ஒரு மாபெரும் கலைஞனை அவமதிப்பதாகிவிடும். நடிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி மிரட்டியிருக்கிறார் மனிதர். சீனாவில் எமி முதல் முறை தன்னிடம் காதலைச் சொல்லும்போது, விக்ரம் காட்டும் ஒரு ரியாக்ஷன் ஒரு சோறு பதம்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில்தான் அவர் எலும்புக்கூடு மாதிரி மெலிந்த தோற்றத்தில் வரவேண்டும். ஆனால் அதற்காக இவர் ஆறுமாதம் மெனக்கெட்டு மெலிந்திருருக்கிறார் என்றால்... இவரை என்னவென்று சொல்வது?

முகமெல்லாம் கட்டிகளாக, தலை சீர்குலைந்து, கூன் விழுந்து... இத்தனை விஷயங்களையும் தத்ரூபமாக, இது மேக்கப்.. இது நடிப்பு என்றெல்லாம் யாரும் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். இன்னொரு தேசிய விருதினை இவருக்குத் தராவிட்டால், அது அந்த விருதுக்கு கவுரவமில்லை!

எமி ஜாக்சன்.. சில காட்சிகளில் படு சாதாரணமாகத் தெரிகிறார். சீனா ஷூட்டிங் காட்சிகள் மற்றும் அந்த என்னோடு நீ இருந்தால் பாடல்களில் பேரழகியாகத் தெரிகிறார். உடைக்கு அநாவசிய செலவெல்லாம் வைக்கவில்லை. ஆனால் இந்தக் கதையில் அவரளவுக்கு வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.


சந்தானம் தனது டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், அவர் இதில் முழு நீள காமெடியன் இல்லை. நாயகனின் தோழனாக வந்து மனதில் இடம்பிடிக்கிறார். பவர் ஸ்டாருக்கு எந்திரன் கெட்டப் போட்டு நடக்க விட்டு, தன் படத்தை தானே கிண்டலடித்திருக்கிறார் ஷங்கர்.

திருநங்கை வில்லியாக வரும் ஓஜாஸ் ரஜனி, தொழிலதிபர் ராம்குமார், மாடல் உபேன் பாட்டேல், அந்த பாடி பில்டர் பட்டினப்பாக்கம் ரவி மற்றும் சுரேஷ்கோபி அனைவருமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். வில்லன்களுக்கு விதவிதமாக தண்டனைகளை யோசிப்பதில், கருட புராணத்தையே மிஞ்சிவிடுகிறது ஷங்கரின் கற்பனை.


படத்தில் விக்ரமுக்கு இணையான நாயகன் ஏ ஆர் ரஹ்மான். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார். மெரசலாயிட்டேன் பாடலின் இரண்டாவது இடையிசை ஒரு நிஜமான இசை விருந்து. என்னோடு நீ இருந்தால், பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல்கள் முதல் முறை கேட்கும்போதே மனதில் ஒட்டிக் கொள்கின்றன. அய்ல அய்ல.. இந்த ஆண்டு முழுக்க இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உதடுகளைப் பிரியாமலிருக்கும்.

அதேபோல பிசி ஸ்ரீராம். இந்த பூமியில் இத்தனை அழகான இடங்கள் இருக்கிறதா என கேட்க வைக்கிறது அவர் ஒளிப்பதிவு. சண்டைக் காட்சிகளை இத்தனை மிரட்டலாகப் படமாக்க தமிழ் சினிமாவில் வேறு ஆள் இல்லை.

அதே நேரம்.. வழக்கமான ஷங்கர் பட பார்முலாவிலிருந்து இம்மியும் விலகவில்லை இந்தப் படம். உடம்பு சரியில்லாமல், கூன் விழுந்த விக்ரம், நாயகியை மணவறையிலிருந்து தூக்கிக் கொண்டு பைப் வழியாக இறங்குவாரே.. அங்கு ஆரம்பிக்கிறது லாஜிக் மீறல். அது படம் முழுக்க தொடர்கிறது.

சண்டைக் காட்சிகளில் அதே லாஜிக் மீறல். நூறு பேரை ஒரு ஹீரோ ஓடிக் கொண்டே அடிப்பது. ஒவ்வொரு சண்டையிலும் வில்லன்கள் விக்ரமை அப்படிப் போட்டு அடிக்கிறார்கள். படத்தில் காட்டுவது மாதிரி ஒருவரைப் போட்டு அடித்தால், கூழாகி கொழகொழவென பரவிக் கிடப்பார். ஆனால் நம்ம ஹீரோவை மணல் மூட்டையைப் போட்டு மொத்துவது போல அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் வில்லன்கள். இரும்பு ராடுகளில் வெளுக்கிறார்கள். ஆனால் அவர் கடைசியில் அசால்டாக எழுந்து வந்து வில்லன்களை காலி பண்ணுகிறார். என்ன லாஜிக்கோ...



முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யமும் இனிமையான காட்சியமைப்பும் இடைவேளைக்குப் பிறகு தொலைந்து போகிறது. அடுத்த காட்சி, அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்து போவதில், சுவாரஸ்யமில்லாமல் போகிறது.

அதேபோல விக்ரமை அந்த நிலைக்கு எப்படி கொண்டுவந்தோம் என வில்லன்கள் ரூம் போட்டு சொல்லும் காட்சியைப் பார்த்தால் ஏனோ எம்ஜிஆர் படம் நம்நாடு நினைவுக்கு வந்தது. அத்தனை பழைய காட்சி அது. திருநங்கையை ஏகத்துக்கும் கேலி செய்வதாக யாரும் சண்டைக்கு வராமல் இருக்க வேண்டும். ஒரு மாணவியை அத்தனை கேவலமான கண்ணோட்டத்துடன் சுரேஷ் கோபி பார்க்கும் காட்சி தேவையா?


உண்மையிலேயே இந்தப் படம் மூன்று மணி பத்து நிமிடங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. சரியாக 2.15 மணி நேரத்துக்குள் இந்தக் கதையைச் சுருக்கி இருக்க முடியும். படத்தில் இடம்பெறும் இரு பாடல்கள் முழுக்க முழுக்க விளம்பர ஜிங்கிள்கள் மாதிரிதான் காட்சி தருகின்றன. ஒரு பிரமாண்ட விளம்பரப் படத்தை எடுக்க இனி ஷங்கர் - பிசி ஸ்ரீராம் - ரஹ்மானை அணுகலாம் எனும் அளவுக்கு கிட்டத்தட்ட 10 மெகா பிராண்டுகளின் விளம்பரங்கள் படத்தில் இடம்பெறுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்!

இவ்வளவு எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், படத்தை ஒரு முறை அலுப்பின்றிப் பார்க்க முடிகிறது. அதுதான் ஷங்கரின் மேஜிக்!


« PREV
NEXT »

No comments