இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர்க்குற்ற விசாரணைகளுக்கு உட்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் தொடர்;ந்தும் இருப்பதாக எம்.ஐ.ஏ என்ற ரெப் இசைப்பாடகி மாயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்ற காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார். அத்துடன் அவரும் போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளை நிராகரித்துள்ளார்.
எனவே தம்மை பொறுத்தவரை, புதிய அரசாங்கம் என்ற போது ஒரே முகம் என்றே தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் தெரிவுக்கு தமிழர்கள் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. எனவே அவருடைய அரசாங்கம் தமிழர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாயா கோரியுள்ளார்.
இந்தநிலையில் ராஜபக்சவின் அரசாங்கம் மேற்கொண்ட தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவ மயத்திட்டங்கள் உட்பட்ட சில விடயங்களில் புதிய அரசாங்கம் விட்டுக்கொடுப்புக்களை செய்வதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று மாயா குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச ஹேக் நீதிமன்றுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் தொடர்ந்தும் இருப்பதாக மாயா அருள்பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons