பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில், இருந்த மூன்று கொள்கலன்கள் இன்று காவல்துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவிருந்த சில பொருட்கள் அந்த கொள்கலன்களில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருக்கலாம் என கருதி கொள்கலன்கள் முன்னர் சீல் செய்யப்பட்டன. டீ சேட், கணனிகள் என்பனவற்றைக் கொண்ட பொதிகள், கொள்கலன்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலி ஓபாத பிரதேசத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் ஸ்தானம் ஒன்றில் இருந்து இலக்க தகடு பொறிக்கப்படாத ஜிப் வண்டி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் சாரதியினால் பழுது பார்ப்பதற்காக இந்த வாகனம் குறித்த பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஜீப் வண்டி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதன் இயந்திரத்தின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனிடையே, கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் இடத்தில் இருந்து இலக்கத் தகடுகள் மற்றும் வாகன அடையாள இலச்சனைகள் அகற்றப்பட்ட நான்கு டிபண்டர் ரக வாகனங்களும் நேற்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவற்றில் இரண்டு டிபண்டர் ரக வாகனங்கள் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Social Buttons