வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களின் நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, இராணுவ பேச்சாளர் ரூவான வனிகசூரிய இந்த தகவலை வெளியிட்டார். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களையோ, ராணுவத்தினரையோ துரிதமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
குடாநாட்டைப் பொறுத்தவரையில், 10 ஆயிரம் ஏக்கருக்கு சற்று அதிகமான நிலப்பரப்புகள் இராணுவத்தின் வசம் உள்ளன. ஏற்கனவே 18 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளன.
சடுதியாக நிலப்பரப்பினை விடுவிக்க முடியாது. படிப்படியாகவே நிலப்பரப்பினை விடுவிக்க முடியும். காலகட்டத்திற்கு அமைய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தே, பாதுகாப்புத் தரப்பினரை நிலைகொள்ள அல்லது அவர்களை இடம்மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாடளாவிய ரீதியாக இராணுவத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என இராணுவ ஊடாக பணிப்பாளர் பிரகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப்பினால், பாப்பரசர் பிரான்சிஸ்சிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இராணுவ ஊடகப்பிரிவு அதிகாரிகள், குறித்த அறிக்கை தொடர்பாக தமக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
அது தொடர்பான விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்த விளக்கமளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
Social Buttons