எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு விளக்கம் கோரி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆயுதப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்ற தனது நோக்கை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதாகும்.
இந்த விசாரணையின் தன்மை பற்றி எதிரணி வேட்பாளர் விளக்க வேண்டும். இந்த விசாரணைக் குழுவின் அதிகாரங்கள், நோக்கம் குறித்து வெளிப்படுத்த வேண்டும்.
ஆயுதப் படையினரை விசாரணைக்கு அழைக்கும் அதிகாரம் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணையை அணுகும் விடயத்தில் முழுமையான, மாற்றமான ஓர் அணுகுமுறை கையாளப்படும் என்று எதிரணி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சரணடையும் கோரிக்கைள் தொடர்பாகவும் எதிரணியின் வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் இந்தக் கோரிக்கைகள் ஏற்கக் கூடியவை அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அரபுலகம், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள நாடுகளின் பெரும்பாலான நாடுகளும் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள நெருக்கடியான விடயங்களுக்கு ஆதரவு வழங்க மறுத்துள்ளன.
இந்த விடயத்தில் குறுகிய அரசியல் இலாபம் தேடும் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தொடர்பாக அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு.
ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாததால் எமக்கு ஆபத்து இல்லை என அவர் தவறான கருத்தைக் கொண்டுள்ளார்.
ஆனால், இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடாத நாடுகளும், பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன என்பது, அண்மைய அனுபவமாக உள்ளது என்றும் அமைச்சர் பீரிஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments
Post a Comment