Latest News

November 19, 2014

ஐ.நா விசாரணைக்காக படிவங்களை வழங்கிய சண்மாஸ்ரர் தப்பியோடிவிட்டார்! ஜீ.எல்.பீரிஸ்
by admin - 0

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கெதிராக முன்வைப்பதற்காக போலியான சாட்சியங்கள் தயாராகின்றன என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது விடயத்தில் தலைமைச் சபையான ஐக்கிய நாடுகள் சபைக் கூட பக்கச் சார்பாகவே செயற்படுகிறது என்றும் அவர் சாடியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டாலும் பிரச்சினைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அண்மையில் வன்னியில் வைத்து கிருஷ்ணராசா என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் என கூறப்படும் ஒரு தொகை மக்களின் கையொப்பம் அடங்கிய வெற்றுக் காகிதங்கள் கைப் பற்றப்பட்டன. அத்தோடு, சுமார் 400 பேரின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


மேலும், இவருடைய தொலைபேசி மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பிலுள்ள சண் மாஸ்டர் என்ற நபருக்கு 67 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது நாட்டில் இருந்து ஓடிவிட்டார். அவர் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் எடுத்த புகைப்படங்களும் கிடைத்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இலங்கைக்கு எதிரான சதி வலையொன்று பின்னப்படுவது தெளிவாகத் தெரிகின்றது.

ஐ.நா விசாரணையில் சாட்சியமளிப்பதற்கான திகதி ஒக்ரோபர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள போதிலும், தேவையேற்படின் சில முக்கிய சாட்சியங்களை பெற்றுக் கொள்வோம் என ஐ.நா அறிவித்துள்ளது. இது மிகவும் பிழையானதொரு செயற்பாடாகும். அடுத்த வருடம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கெதிராக செயற்பட வேண்டும் என ஐ.நா. இப்போதிலிருந்தே செயற்பட்டு வருகின்றது.

அதற்கான போலி ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியாகவே கிருஷ்ணராசாவின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் எம்மால் கருதப்படுகின்றது என்றார்

.

« PREV
NEXT »

No comments