விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. மீஞ்சூர் கோபி என்பவர் கத்தி கதைக்கு உரிமை கொண்டாடியதோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். தற்போது ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம ராவ் என்பவர் கத்தி படத்தின் கதைக்கு உரிமைகோரி இருக்கிறார்.
நண்பன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். அப்போது விஜய்யிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். நரசிம்ம ராவ் சொன்ன கதையில் மிகவும் இம்ப்ரஸ்ஸான விஜய், நண்பன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் மீண்டு மீண்டும் அந்தக்கதையைச் சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறார்.
இப்படியாக நான்கு முறை விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார் நரசிம்ம ராவ்.அந்தக் கதைதான் கத்தி படத்தின் கதை! தன்னுடைய கதைதான் கத்தி படமாக தயாராகிறது என்பது ஆந்திராவில் இருந்ததால் நரசிம்மராவுக்கு தெரியவில்லையாம். மிக தாமதமாகவே தெரிந்திருக்கிறது.
உடனடியாய் கத்தி படத்தைப் பார்த்தவர் அதிர்ச்சியடைந்து உடனடியாய் ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம் ரைட்டர் அஸோஸியேஷனில் புகார் கொடுத்திருக்கிறார். விஜய்யிடம் சொன்ன (கத்தி) கதையை 2010 ஆம் வருடம் இதே அஸோஸியேஷனில் பதிவு செய்தும் வைத்திருக்கிறார் நரசிம்மராவ்.
கத்தி படத்தைப் பார்த்த தெலுங்கு திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் நரசிம்மராவின் கதையிலிருந்து 80 சதவிகித காட்சிகள் படத்தில் உள்ளதை உறுதி செய்துள்ளனர். எனவே இவரது புகாரை, சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பி உள்ளனர். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இந்தப் பிரச்சனையில் நரசிம்மராவுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தி படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவோ ரீமேக் செய்யவோ கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸை வைத்து யாரும் தெலுங்கில் படங்கள் தயாரிக்கக் கூடாது என்றும், விஜய் நடிப்பதற்கு தெலுங்குப் படங்களின் ரீமேக் ரைட்ஸை யாரும் கொடுக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment