தமிழகம் சென்று திரும்பும் தமிழர்களை கைது செய்யும்படலம் இன்றும் தொடர்கதையாகிறது சுற்றுலா வீசாவில் தமிழகம் சென்று திரும்பிய வடமராட்சியை சேர்ந்த குடும்பஸ்தர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றார்.
வடமராட்சியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் தனது குடும்பத்துடன் தமிழகத்திற்கு சுற்றுலா வீசாவில் சென்றிருந்தார். வீசா காலம் முடிவடையும் நிலையில் நாட்டிற்கு திரும்பிய போதே கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் விமான நிலைய அறையில் விசாரணை நடத்திவிட்டு மேலதிக விசாரணைக்காக அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்து குடும்பத்தினரை அனுப்பியுள்ளார்கள்.
கொழும்பில் உள்ள நான்காம் மாடியில் குறிப்பிட்ட குடும்பஸ்தர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். இதுவரை அவரது குடும்பத்தினரை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
தமிழகத்தில் இருந்து திரும்பிய இன்னொரு குடும்பஸ்தர் பலமணிநேரம் தடுத்து வைத்து விசாரணை!
இதே போன்று முள்ளிவாய்க்கால் பேரழிவில் இருந்து தப்பித்து தமிழகத்தில் தங்கியிருந்த குடும்பம் ஒன்று நாட்டிற்கு திரும்பிய போது கட்டுநாயக்காவில் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் தமது உயிரை பாதுகாப்பதற்காக ஏதிலிகளாக தங்கியிருந்த அவர்கள் அங்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை தாங்கிக் கொள்ள முடியாது செத்தாலும் பறவாயில்லை ஊரோட போய் இருப்பம் என்று திரும்பியவர்களே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
குறித்த குடும்பத் தலைவரை கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தனியறையில் ஐந்து மணிநேரத்திற்கு அதிகமாக தடுத்து வைத்து விசாரித்துள்ளார்கள். விசாரணையின் இடையில் சிங்கள இராணுவத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் கயவர்களாக மாறியுள்ள தமிழர்கள் பலர் வந்து பார்த்துச் சென்றனர்.
விசாரணையின் நடுவில் வந்து அவதானித்துச் சென்றவர்களால் இனம் காணப்படாத காரணத்தால் அவர் கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுவிக்கப்பட்டாலும் அவர் முழுமையான புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளார்.
Social Buttons