இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பமான 27 வது கூட்டத் தொடரில் பேசிய ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆற்றிய பங்கை பாராட்டுவதாக தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல், மரியாதை,ஊக்குவிப்பு, வன்முறை, பாதுகாப்பு தொடர்பில் உலகின் கவனத்தை திரும்பியமை, பாலியல் மற்றும் பாலின அடையாளம் போன்ற விடயங்களில் முன்னாள் ஆணையாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையை அமெரிக்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இந்த விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஹார்பர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என ஜெனிவாவுக்கான பிரித்தானிய பிரதிநிதி கோரினார்.
அச்சுறுத்தல், பழிவாங்கல்கள் இல்லாமல் விசாரணைக்கான ஒத்துழைப்பு மற்றும் அணுகலை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Social Buttons