அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களுக்கான பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவும், அவர்கள் மீதான அச்சுறுத்தல்களின் பின்விளைவுகளை சிறிலங்காவுக்கு எச்சரிக்கை செய்யவும், ஐ.நா மனித உரிமைச் சபையானது, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருக்கும் இளவரசர் செய்ட் ராட் செய்ட் ஹுசைன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே, இக்கோரிக்கையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான புதிய ஆணையாளரது பின்னணி, மானிடத்தின் மனச்சாட்சியாக வரப்போகும் ஆண்டுகளில் அவர் விளங்குவார் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவும் அக்கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையத்தின், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனையொட்டிய குற்றங்கள் பற்றியதான விசாரணைக்குரிய நெறிமுறை வரம்புகளின் தெளிவான வழிகாட்டுதலையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கடித்தில் பாராட்டியுள்ளார்.
ஐ.நாவின் அனைத்துலக விசாரணையில் பங்கெடுக்கும் சாட்சியங்கள் மீது, நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல், இராணுவ தலைவர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும், இக்கடிதத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளதோடு, இவ்விவகாரத்தில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பினை உறுத்திப்படுத்துமாறும் ஐ.நாவின் புதிய ஆணையாளரை பிரதமர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய காலங்களில் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கும் ஐ.நாபாதுகாப்பு சபைக்கும் இடையிலான தொடர்பாடலை கோடிட்டு, ஐ.நா பாதுகாப்பு சபையானது சிறிலங்கா விடயத்தினை முற்றுமுழுதாக கையிலெடுத்து, சாட்சியங்களிகளின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதோடு, சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களின் பின்விளைவுகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுமாறு, ஐ.நா பாதுகாப்பு சபையினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்த வேண்டும் எனவும் இக்கடித்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
பூமிப்பந்தில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டுவதோடு, தன்னுடைய பதவிக் காலத்தில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள், கொங்கோ, லிபியா, வடகொரியா, சிறிலங்கா, சிரியா ஆகிய நாடுகள் விடயத்தில் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுவதாகவும், தொடந்தும் பாகுபாடு ஏதுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அக்கடித்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
Social Buttons