Latest News

September 06, 2014

இறுதிப்போரில் பொதுமக்கள் மரணங்களுக்கு ஐ.நா. சபையின் நடவடிக்கையின்மையே காரணம்- ரொய்ட்டர்
by Unknown - 0

இறுதிப்போரின் போது இலங்கையில் பொதுமக்களை காப்பாற்றுவதில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2009 ம் ஆண்டில், கடுமையான போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் பிரிவினைவாதிகளால் மனித கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை இலங்கை அரசாங்கப் படையினர் சுற்றிவளைத்தனர்.
இந்தநிலையில் 2011ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி குறித்த போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினரின் ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்திருந்தது. எனினும் இதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சுயவிசாரணையில் இறுதிப்போரின் போது 7ஆயிரம் பொதுமக்களே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையின் இரண்டு தர்மஸ்தாபனங்களின் அறிக்கையின்படி வன்முறைகள் ஏற்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து தவறு இழைத்தனர்.
இதன்போது, ஐக்கிய நாடுகளின் அனைத்துக் கட்டமைப்புகளும் மனிதாபிமான அழிவுகளை தடுப்பதில் சிறிய முயற்சிகளையே மேற்கொண்டன.
குறித்த போரின் போது ஆரம்பத்திலேயே ஐக்கிய நாடுகள் சபை, விடுதலைப்  புலிகளிடம் இருந்து பொதுமக்களை அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு கொண்டு வருவதில் தோல்வி கண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கா நிறுவனம் மற்றும் (the  Consortium of  Humanitarian Agencies)  மனிதாபிமான நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய அமைப்புக்களின் இந்த அறிக்கை, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை குழுக்கள் என்பன பொதுமக்களின் மரணங்களுக்கு அரசாங்கப் படையினரே முழுமையான பொறுப்பு என்று கூறியிருந்தமைக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்காமைக்கு அவர்களின் கண்காணிப்பில் குறை இருந்ததாக குறித்த இரண்டு நிறுவனங்களும் கூறியுள்ளன.
இதேவேளை குறித்த இரண்டு நிறுவனங்களின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம் கருத்து எதனையும் கூற மறுத்து விட்டதாக ரொயட்டர் தெரிவித்துள்ளது.
போர் இடம்பெற்ற வேளையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பணியாளர்களை போர் வலயங்களில் இருந்து மாற்று இடங்களுக்கு மாற்றியது. இலங்கை அரசாங்கம் அவர்களை போர் இடம்பெறும் இடங்களில் இருந்து வெளியேற அறிவுறுத்திய போதும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் போர் இடம்பெற்ற இடங்களில் தங்கியிருக்க அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியிருக்கமுடியும்..
அரசாங்கம் இந்த விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மேலதிக காலத்தை வழங்குவதற்கும் இணங்கவில்லை. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளை பொறுத்தவரையில் பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதில் உள்ள பாதுகாப்பு கடமையில் இருந்து தவறியுள்ளதாக இரண்டு நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளை பொறுத்தவரையில் அந்த அமைப்பு, மரணங்களை குறைக்கும் நோக்கில் பொதுமக்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்ல ஊக்கப்படுத்தியிருக்கலாம்.
இதனைவிட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்கும் பொதுமக்களின் மனிதாபிமான ஆபத்துக்களி;ல் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்குமான நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை களத்தில் கொண்டிருக்கவில்லை என்றும் இரண்டு மனிதாபிமான நிறுவனங்களும் குற்றம் சுமத்தியுள்ளன.
« PREV
NEXT »